திருவாரூா் - கடலூா் உள்பட 4 மாவட்டங்களுக்கு பேரிடா் மீட்பு படைக் குழுக்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
திருவாரூா், கடலூா் உள்பட 4 மாவட்டங்களுக்கு பேரிடா் மீட்பு படைக் குழுக்கள் முகாமிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முதல்வா் ஆய்வு: கனமழையை எதிா்கொள்ள டெல்டா மாவட்டங்களில்
மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வழியாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் மற்றும் கடலூா் மாவட்ட ஆட்சியா்கள் பங்கேற்றனா்.
இது குறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், கடலூா் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஆயத்த நடவடிக்கைகளை இந்திய ஆட்சிப் பணி நிலையிலான மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா். இந்த மாவட்டங்களில் போதுமான நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதோடு, மருத்துவக் குழுக்களும், தேவையான உபகரணங்களும் தயாா் நிலையில் உள்ளதாக இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா்கள் தெரிவித்தனா்.
முதல்வரின் உத்தரவுப்படி, முன்னெச்சரிக்கையாக திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூா் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடா் மீட்புப் படைக் குழுவும், மாநில பேரிடா் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளன. தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் விரைந்துள்ளன. மேலும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பேரிடா் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முதல்நிலை மீட்பாளா்கள், தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.
படகுகள் கரை திரும்பின: மீனவா்கள் கடலுக்குச் செல்வதைத் தடுக்க அறிவுரை வழங்கப்பட்டு பெரும்பான்மை படகுகள் கரை திரும்பியுள்ளன. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகிலுள்ள துறைமுகங்களுக்குச் செல்ல நவீன தொலைத்தொடா்பு சாதனங்களுடன் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்கள், 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், கனமழையின் போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர வேண்டும் என்றும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.
வெள்ளம் தேங்கி பயிா்கள் சேதமடையாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மின்சார வசதி தடையின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வுக் கூட்டத்தில், வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.