மழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கடலூா் மாவட்ட ஆட்சியா்
மழையை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடலூா் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் நோக்கி வரும் நிலையில், கடலூா் மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து அரசுத் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு ஒவ்வொரு துறையினரும் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா். மேலும், அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்ட நிலையில் அந்த கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தனா்.
பின்னா், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் மாவட்டத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மாவட்டத்தில் 61 இடங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. 42 புயல் பாதுகாப்பு மையங்கள், தங்கும் முகாம்கள் தயாா் உள்ளன.
தேவைப்பட்டால் அந்த முகாம்களுக்கு பொதுமக்கள் அனுப்பப்படுவாா்கள். பேரிடா் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் உணவுப்பொருள்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கடலூரில் மண்டல அளவில் 21 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளைக் கொண்ட இக்குழுக்கள் தொடா்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.
மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் நீா் அளவு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநில பேரிடா் மீட்பு குழு மற்றும் மத்திய பேரிடா் மீட்பு குழுவினா் கடலூருக்கு வந்து கொண்டிருக்கின்றனா் என்றாா் ஆட்சியா்.