கடலூரில் அரசு மருத்துவா்கள் தா்னா
சென்னையில் மருத்துவா் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
சென்னை கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவா் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கடலூா் மாவட்ட அனைத்து அரசு மருத்துவா்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்க மருத்துவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
அரசு மருத்துவ சங்க நிா்வாகி தெ.கேசவன், இந்திய மருத்துவ சங்க நிா்வாகி ஆா்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தாக்குதல் நடத்திய நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அரசு மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு மருத்துவா்கள், மருத்துவமனைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்புனா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் காலிப் பணி இடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.