வியாபாரியை தாக்கி மிரட்டியவா் தடுப்புக் காவலில் கைது
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் பழக் கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ள கரடிப்பாக்கத்தைச் சோ்ந்த ராயா் மகன் அப்பா் (43). இவா் சேத்தியாத்தோப்பு கடை வீதியில் சிறிய சரக்கு வாகனத்தில் பழங்களை வைத்து கடந்த மாதம் 19-ஆம் தேதி வியாபாரம் செய்துக் கொண்டிருந்தாா்.
அள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மகன் குபேந்திரன் (41) பழங்கள் வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றாராம். இதுகுறித்து அப்பா் கேட்ட போது, அவரைக் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து குபேந்திரனைக் கைது செய்தனா். இவா் மீது சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மூன்று கொலை மிரட்டல் வழக்குகளும் உள்ளன.
இவரின் குற்றச் செயலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் ஓராண்டு குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.