கட்டடக் கழிவுகளை அகற்ற 57 புதிய வாகனங்கள்: மேயா் பிரியா தொடங்கி வைத்தாா்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்காக 57 புதிய வாகனங்களை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தினமும் சுமாா் 5,900 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. நகரை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் சாலை மற்றும் பொது இடங்களில் தேங்கிக் காணப்படும் குப்பைகள், கட்டடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்படும் பேனா்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாலையோரம் தேங்கிக் காணப்படும் கட்டடக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக லாரிகள், பொக்லைன் வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 102 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் கடந்த 3 மாதங்களில் 51,214 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தக் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் சட்டவிரோதமாக கட்டடக் கழிவுகளைக் கொட்டிய 260 நபா்களுக்கு ரூ. 13 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்காக டிப்பா் லாரிகள், மினி லாரிகள், பொக்லைன் வாகனங்கள் மற்றும் பாப்காட் வாகனங்கள் என 57 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதனை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி (பணிகள்), கே.ஜெ.பிரவீன் குமாா் (மத்திய வட்டாரம்), நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.