கணவன் கொலையில் சிக்கிய மனைவி; உடந்தையாக இருந்த விசிக நிர்வாகியும் திடீர் தற்கொலை - நடந்தது என்ன?!
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஆரணி அடுத்துள்ள பையூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் ரம்யாவுக்குத் திருமணம் மீறிய தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. கல்யாணபுரம் கூட்ரோடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, நெல் அறுவடை இயந்திரம் மற்றும் வைக்கோல் சுருட்டும் இயந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார் பெருமாள். தனது ஊரிலேயே ஆண் நண்பர் பெருமாள் தங்கியிருந்ததால், கணவருக்குத் தெரியாமல், பெருமாளை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கிறார் ரம்யா. நாள்கள் செல்லச் செல்லத்தான் மனைவி ரம்யாவின் நடத்தையில் சுதாகருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மனைவியின் தவறான தொடர்பு தெரியவந்ததால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான சுதாகர், கோழிப்புலியூர் கிராமத்தில் வசிக்கும் தனது நண்பன் சீனுவளவனைச் சந்தித்து, தனது மனைவியின் நடத்தை விவகாரம் குறித்துக் கூறி வேதனைப்பட்டிருக்கிறார்.
சீனுவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். நண்பன் சுதாகரை சமாதானப்படுத்திய வி.சி.க நிர்வாகி சீனுவளவன், அவரது மனைவியுடன் திருமணம் மீறிய தொடர்பிலுள்ள பெருமாளை கண்டிப்பதற்காகச் சென்றுள்ளார். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென ரம்யா மீது சீனுவளவனுக்கு அக்கறை ஏற்பட்டது. ரம்யா சொல்படி கேட்க ஆரம்பித்து, பெருமாளுடன் நட்புப் பாராட்டத் தொடங்கியிருக்கிறார் சீனுவளவன். முடிவில் நண்பன் சுதாகருக்கே துரோகியாகவும் மாறிவிட்டாராம் சீனுவளவன்.
இதையடுத்து, இடையூறாக உள்ள தனது கணவன் சுதாகரைத் தீர்த்துகட்டும் முடிவுக்குச் சென்றுள்ளார் ரம்யா. இவரது திட்டத்துக்கு பெருமாளும், சீனுவளவனும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். திட்டமிட்டபடி கடந்த 17-ம் தேதி சுதாகரை மது குடிக்க அழைத்துசென்ற நண்பன் சீனுவளவன், மறைத்து கொண்டு வந்திருந்த விஷத்தை மதுவில் கலந்து சுதாகரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
விஷம் கலந்த மது எனத் தெரியாமல் சுதாகரும் வாங்கி குடித்திருக்கிறார். பிறகு, ஏரிக்கரை அருகிலுள்ள காரியமேடை பகுதியில் சுதாகரைப் படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்து சீனுவளவன் சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. வாயில் நுரைத் தள்ளியபடி இறந்து கிடந்த சுதாகரைப் பார்த்த உறவினர்களிடம், `குடிச்சு குடிச்சே செத்துட்டான். என் வாழ்க்கையே போச்சே..’ என கதறி அழுது நடித்திருக்கிறார் மனைவி ரம்யா. ரம்யாவின் நடிப்பை நம்பி ஏமாந்த உறவினர்கள், சுதாகரைக் குறைச்சொல்லியபடி மறுநாள் காலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்துவிட்டார்கள். அதன் பிறகே, சுதாகரின் நெருங்கிய நண்பனும், வி.சி.க நிர்வாகியுமான சீனுவளவன், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாதது குறித்து ஊர்க்காரர்களுக்கும், சுதாகரின் உறவினர்களுக்கும் கேள்வியெழுந்து, சந்தேகம் ஏற்பட்டது.
தன் மீது சந்தேகப் பார்வைப் பட்டதும் சுதாரித்துக்கொண்ட சீனுவளவன் திடீரென சபரிமலைக்கு மாலை அணிந்துகொண்டார். ஆனாலும், நண்பனைக் கொன்ற குற்ற உணர்வு அவரை உறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 19-ம் தேதி தனது கிராமத்தின் சாலையோரமுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைச் செய்து கொண்டார் வி.சி.க நிர்வாகியான சீனுவளவன். ஆனாலும், சீனுவளவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு சீனுவளனின் சடலத்தை வாங்க மறுத்தும் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
இதனிடையே, நண்பர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் பெரிய சந்தேகத்தையும், பரபரப்பையும் உண்டாக்கியது.
இந்த நிலையில்தான் ஒட்டுமொத்த விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது. சுதாகரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது தம்பி, வடவணக்கம்பாடி போலீஸில் கடந்த 21-ம் தேதி புகாரளித்தார். இதையடுத்து, சேத்துப்பட்டு தாசில்தார் சசிகலா முன்னிலையில் சுதாகரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைச் செய்தபோது, விஷம் கலந்த மது கொடுக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டது உறுதியானது. விவகாரம் வெளியில் வந்ததும், சுதாகரின் மனைவி ரம்யாவிடம் ஒருவித பதட்டம் காணப்பட்டது. இதனால், ரம்யாவின் செயல்பாடுகளை கண்காணித்த போலீஸார், அவரின் செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, ஆண் நண்பர் பெருமாள் மற்றும் வி.சி.க நிர்வாகி சீனுவளவனிடம் இருந்து அதிக அழைப்புகள் ரம்யாவுக்கு வந்தது தெரியவந்தது.
போலீஸார் தன்னை நோட்டமிடுவதை தெரிந்துகொண்ட பெருமாள் நேற்று காலை வெளியூர் தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அவரை மடக்கிப் பிடித்த போலீஸாரிடம், குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ரம்யாவையும் போலீஸார் கைது செய்தனர். கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொலைச் செய்ய வி.சி.க நிர்வாகி சீனுவளவனுக்கு ரூ.3 லட்சம் கொடுப்பதாகக் கூறினாராம் ரம்யா. அதற்கு ஒப்புக்கொண்டே சீனுவளவன் நண்பன் என்றும் பார்க்காமல் சுதாகரைக் கொலைச் செய்துள்ளாராம். குற்ற உறுத்தல் காரணமாக, சீனுவளவனும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டதும், விசாரணையில் தெளிவாகத் தெரியவந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, இவ்வளவுப் பெரிய சம்பவத்தை சாதாரணமாக நிகழ்த்திய ரம்யாவும், பெருமாளும் நீதிமன்றக் காவலில் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், கொலைக்காக பயன்படுத்திய 4 செல்போன்கள் மற்றும் டூவீலர்களையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.