கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 300 கன அடி நீர் திறப்பு அதிகரிப்பு!
திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திரத்தின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் 300 கன அடியாக அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி ஏரியாகும். இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கி இருப்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழக-ஆந்திரம் அரசுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திரம் மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இந்த பருவத்திற்கான தண்ணீரை அளிக்கும்படி ஆந்திர பொதுப்பணித் துறையினருக்கு தமிழக நீர்வளத்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பிரதமரின் இலங்கைப் பயணம்!
இதையேற்று கடந்த மார்ச் 23 ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 27 ஆம் தேதி 300 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் கடந்த 28 ஆம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 100 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது. ஜீரோ பாயிண்டில் இருந்து செல்லும் கிருஷ்ணா நீர் 25 கி.மீ தூரம் கடந்து பூண்டி ஏரிக்கு 29 ஆம் தேதி பிற்பகல் வந்து சேர்ந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் 300 கன அடி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் பூண்டி ஏரிக்கு 270 கன அடியாக வரத்து உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். எனவே வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 33.08 உயரமும், 2,544 மில்லியன் கன அடியும் இருப்பு உள்ளது. இங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரி செல்லும் கிருஷ்ணா கால்வாயில் 350 கன அடியும், பேபி கால்வாயில் குடிநீருக்காக 17 கன அடியும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.