சேலத்தில் கனமழை எதிரொலி; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்ச...
கனமழையால் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்– உணவருந்தியபோதே தாய், மகள் உயிரிழந்த சோகம்
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், கடந்த 16-ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதேபோல நேற்று 21.10.2025 அன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய மழை இன்று 22.10.2025 காலை வரை நீடித்தது.

அதில் அதிகப்படியாக புதுச்சேரி காலாப்பட்டில் 25 செ.மீ மழையும், தமிழகத்தில் கடலூரில் 17.4 செ.மீ மழையும் பதிவாகியிருக்கிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று காலை வரை கனமழை பெய்தது. அப்போது சிதம்பரம் அருகே இருக்கும் ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அசோதையும், அவரின் மகள் ஜெயாவும் தங்கள் குடிசை வீட்டில் உணவருந்தியபடி அமர்ந்து கொண்டிருந்தனர்.
அந்தக் குடிசைக்கு அருகிலேயே அவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீடு ஒன்றும் இருந்தது. தொடர்ச்சியான மழையால் அந்த ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து, அசோதையும், ஜெயாவும் அமர்ந்திருந்த குடிசை மீது விழுந்தது. அது சிமெண்ட் சுவர் என்பதால் அந்தக் குடிசையும், அதற்குள்ளிருந்த அசோதை, ஜெயாவும் அந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்கள். அப்போது அவர்களின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.

ஆனால் அதற்குள் அசோதையும், ஜெயாவும் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்கள். இதற்கிடையில் தகவல் கேள்விப்பட்ட புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வு சோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும், மகளும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்தால், சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர் ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராம மக்கள்.