கன்னியாகுமரி: மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை; கைதுக்குப் பயந்து தற்கொலைக்கு முயன்ற மாமியார் பலி
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செண்பகவல்லி. இவரது கணவர் நாகராஜன் மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்த சமயத்தில் இறந்ததால் வாரிசு அடிப்படையில் அவர்களது மகன் கார்த்தி-க்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. இவர்கள் புதிய வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
கார்த்திக்கும் கோயம்புத்தூர் கோயில்பாளையம் சக்தி பிரதானச்சாலை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரது மகள் சுருதி பாபு (24) ஆகியோருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி திருமணம் நடந்தது. இவர்கள் புதிதாகக் கட்டிய வீட்டில் வசித்து வந்தனர். திருமணம் முடிந்த நாள் முதல் செண்பகவல்லி தனது மருமகள் சுருதி பாபுவிடம் பல கட்டுப்பாடுகள் விதித்துவந்துள்ளார்.
இதுகுறித்து சுருதி பாபு அவரது தாயின் வாட்ஸ் அப் மூலமாக வீடியோ மற்றும் போன் மூலம் தனது மாமியார் தன்னைத் துன்புறுத்தி வருவதாகக் கூறியுள்ளார். இதற்கிடையே மாமியார் செண்பகவல்லியின் கொடுமைகளை ஆடியோவாக பேசி தாய்க்கு அனுப்பிவிட்டு, கடந்த 21-ம் தேதி சுருதி பாபு தற்கொலை செய்துகொண்டார்.
சுருதி பாபு தனது தாய்க்கு அனுப்பிய ஆடியோவில், "என் கணவரால் எந்த பிரச்னையும் இல்லை. கணவரின் தாய்தான் பிரச்னை செய்கிறார். என் கணவருடன் வெளியில் சென்றாலோ, அவருடன் சேர்ந்து சாப்பிட்டாலோ மாமியார் திட்டுகிறார். கணவர் சாப்பிட்ட எச்சில் தட்டில்தான் சாப்பிடவேண்டும் என்கிறார். நான் வீட்டுக்கு வந்து வாழாவெட்டியாக இருக்க விரும்பவில்லை" எனக் கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து சுருதிபாபுவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுருதி பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. மேலும், ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் சுருதிபாபு-வின் மாமியார் செண்பகவல்லி தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் கடந்த 23-ம் தேதி விஷம் குடித்தார். மிகவும் ஆபத்தான நிலையில் அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் செண்பகவல்லிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (அக்டோபர் 28) இரவு 7 மணிக்குச் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். தங்கள் குடும்ப விவகாரம் இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தத்திலும், விசாரணைக்குப் பயந்தும் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மருமகள் தூக்குப்போட்டு இறந்த நிலையில் மாமியார் விஷம் குடித்து இறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb