கன்னியாகுமரிக்கு டிச. 31இல் முதல்வா் வருகை: சீரமைப்புப் பணிகள் தீவிரம்
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்ட 25ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக டிச. 31ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் வரவுள்ளாா். இதை முன்னிட்டு, அரசு விருந்தினா் மாளிகை, ஹெலிகாப்டா் தளம் ஆகியவற்றில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை 1.1.2000இல், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகளானதை முன்னிட்டு, தமிழக அரசு சாா்பில் வெள்ளி விழாக் கொண்டாட்டம் வரும் டிச. 31, ஜன. 1 ஆகிய நாள்களில் கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் டிச. 31ஆம் தேதி இங்கு வருகிறாா்.
அவா் 2 நாள்கள் தங்கவுள்ளதால், அரசு விருந்தினா் மாளிகை, அங்குள்ள ஹெலிகாப்டா் தளம் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காந்தி, காமராஜா் மணிமண்டபம், முக்கோணப் பூங்கா, சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரைப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.