சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கா...
"கரிஷ்மா கபூரின் திருமண வாழ்க்கையை பிரியா அழித்தார்" - சஞ்சய் கபூர் சகோதரி புகாரின் பின்னணி என்ன?
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சஞ்சய் கபூர் நடிகை கரிஷ்மா கபூரை விவாகரத்து செய்துவிட்டு பிரியா சச்சிதேவ் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
சஞ்சய் கபூர் இறந்தபோது ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான கம்பெனியை விட்டுச்சென்றுள்ளார். சஞ்சய் கபூருக்குத் தனிப்பட்ட முறையில் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சொத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கையில் பிரியா சச்சிதேவ் ஈடுபட்டுள்ளார்.
அதேசமயம் கரிஷ்மா கபூரும் சொத்தில் தனது குழந்தைகளுக்கான பங்கைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனது குழந்தைகள் சார்பாக கரிஷ்மா கபூர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு விசாரணைக்கு வந்தபோது சஞ்சய் கபூர் பெயரில் இருக்கும் சொத்து விபரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சஞ்சய் கபூர் உயில் ஒன்றை எழுதி இருப்பதாக பிரியா சச்சிதேவ் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த உயில் விபரத்தை கோர்ட்டில் தெரிவிக்க முடியாது என்றும், அது ரகசியங்களைக் கொண்டது என்றும் பிரியா சச்சிதேவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சொத்து விபரங்களைச் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிரியா சச்சிதேவிற்கு எதிராக சஞ்சய் கபூர் தாயார் மற்றும் சகோதரி ஆகியோரும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர்.
இப்பிரச்னை குறித்து சஞ்சய் கபூரின் சகோதரி மந்திரா கபூர் அளித்த பேட்டியில், ''சஞ்சய் கபூர் பிரியா சச்சிதேவுடன் நெருக்கமாக இருந்தது எனக்கு தெரியும். அதேசமயம் அதற்கு நான் ஒப்புதல் கொடுக்கவில்லை. அவர்கள் இரண்டு பேரும் விமானத்தில் சந்தித்துக்கொண்டதில் இருந்து எனக்குத் தெரியும். ஆனால் அதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
அந்நேரம் கரிஷ்மா கபூரும், எனது சகோதரனும் நன்றாக இருந்தனர். அந்நேரம் கியான் பிறந்திருந்தான். குழந்தைகள் மீது எனது சகோதரன் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தான். ஒரு குழந்தை பெற்ற பெண்ணைப் பற்றி இன்னொரு பெண் கவலைப்படாமல் இருப்பது மோசமான ரசனை என்று நான் நினைக்கிறேன்.
ஒரு குடும்பத்தைச் சீர்குலைப்பது மோசமான ரசனை. நீங்கள் ஒரு மகிழ்ச்சியான திருமண உறவைப் பிரிக்கக் கூடாது. அல்லது அதற்கான வேலையில் ஈடுபடக்கூடாது. கரிஷ்மா கபூரின் திருமண வாழ்க்கையை பிரியாதான் அழித்தார்.
பிரியாவுடனான எனது சகோதரனின் உறவுக்கு எனது தந்தை உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். எனது தந்தை ஒட்டுமொத்தமாக அவர்களது உறவை எதிர்த்தார்.

பிரியாவைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும், பிரியாவின் முகத்தில் விழிக்க விரும்பவில்லை என்றும், இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும் எனது தந்தை தெரிவித்தார்.
யாரும் அவர்கள் இரண்டு பேருக்கும் ஆதரவாக இல்லை. நான் எனது சகோதரன் மீதுள்ள அன்பு காரணமாக அவர்களுக்கு ஆதரவு கொடுத்தேன். என்னைப் பொறுத்தவரை கரிஷ்மாவிற்கு குழந்தைகள் இருக்கின்றன. அவருக்கு அனைத்தும் இருப்பதால் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று நினைத்தேன்.
2017ம் ஆண்டு பிரியா மற்றும் எனது சகோதரனின் திருமணத்திற்குக்கூட நானும், எனது சகோதரியும் செல்லவில்லை. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று எனது தந்தை தெரிவித்ததால் நாங்கள் அத்திருமணத்திற்குச் செல்லவில்லை. கரிஷ்மாவின் கஷ்டமான நேரத்தில் அவருடன் இல்லாமல் போனது வருத்தமாகத்தான் இருக்கிறது.
உண்மையில் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. இதனால் அவர் என் மீது அதிருப்தியில் இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதற்காக நான் அவரைக் குறைசொல்லமாட்டேன்.
அவர் எனது சிறந்த தோழி. அவருக்குத் துணையாக இருக்காமல் போனது குறித்து நான் மிகவும் மோசமான உணர்கிறேன்'' என்று தெரிவித்தார்.