இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைமை செய்தித் தொடர்பாளர் கொலை!
கருத்தரிப்பை Pull Out முறை 100 சதவிகிதம் தடுக்குமா? | காமத்துக்கு மரியாதை - 215
எனக்குத் திருமணம் ஆகி சில மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன. தற்போதைக்கு எங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறோம். என் மனைவிக்குக் கருத்தடை மாத்திரை சாப்பிடுவதில் விருப்பமில்லை. எனக்கோ, காண்டம் அணிந்து கொண்டால் ஸ்கின் டு ஸ்கின் டச் ஆவதால் வரும் உணர்வு கிடைப்பதில்லை. இதனால், தாம்பத்திய உறவில் திருப்தி கிடைப்பதில்லை. சில காணொளிகளில், "Pull Out முறையை ஃபாலோ செய்தால் கருத்தரிப்பதைத் தள்ளிப் போடலாம்; கூடவே தாம்பத்திய உறவில் இயற்கையான ஃபீலையும் உணர முடியும்" என்று சொன்னதைக் கேட்டேன். நானும் pull out முறையை ஃபாலோ செய்யலாமா... அது குழந்தை பிறப்பதை நூறு சதவிகிதம் தள்ளிப் போடுமா? ஒரு வாசகரின் கேள்வி இது. இதை பாலியல் மருத்துவர் காமராஜ் அவர்களிடம் கேட்டோம்.
’’கருத்தரிக்காமல் இருக்க பல தம்பதியர் காண்டம், காப்பர் டி என்று பல வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறார்கள். சிலர் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளும்போது Pull Out செய்தால் கருத்தரிக்காது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது’’ என்றவர் இதைப் பற்றி விளக்கமாகப் பேசினார்.
’’இந்த முறையை நாங்கள் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் கருத்தரிக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் இது பாதுகாப்பான முறையல்ல. ’இந்த முறையைத்தான் நாங்கள் ஃபாலோ செய்கிறோம்’ என்று எங்களைச் சந்திக்க வரும் தம்பதியர் சொன்னாலும், Pull Out முறை வேண்டாம் என்றுதான் அறிவுரை செய்வோம். இப்போது குழந்தை வேண்டாம் என்றால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மாத்திரையோ அல்லது காப்பர் டி யோ பெண்கள் ஃபாலோ செய்யலாம். அல்லது ஆண்கள் காண்டம் பயன்படுத்தலாம். குழந்தைப் பிறப்பைத் தடுப்பதில் இவையெல்லாம் 98 சதவீதத்திற்கும் அதிகமாக நம்பகத்தன்மை கொண்டவை.
ஏன் Pull Out முறை கூடவே கூடாது?
உறவின் முடிவில், பெண்ணுறுப்பில் விந்தணுக்களை விடாமல் ஆணுறுப்பை வெளியில் எடுப்பதுதான் Pull Out முறை. இந்த முறை 60-ல் இருந்து 70 சதவிகிதம் வரைதான் பாதுகாப்பு. ஆணுறுப்பை வெளியில் எடுக்கும் போது ஒரு துளியோ இரண்டு துளியோ, விந்தானது மனைவியின் கருப்பைக்குள் விழுந்து விட்டாலும் கருத்தரிக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், இந்த முறையைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
‘நான் கவனமாக இருப்பேன்’ என்று சில கணவர்கள் சொல்வார்கள். ஆனால், ஆணுறுப்பிலிருந்து ஒரு துளி விந்து தவறுதலாக மனைவி மீது விழுவதை, அந்த நேரத்தில் கணவனால் கவனிக்க முடியாது. அதிலும் திருமணமான புதிதில் இது இன்னும் கடினம். அந்த உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இதைக் கவனமாகச் செய்ய முடியாது. குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட வேண்டுமென்றால், Pull Out முறை அவாய்ட் செய்யுங்கள் என்பதுதான் என் கருத்து. உறவுகொள்ளும்போது இயற்கையான உணர்வு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு ஏற்றார் போன்ற காண்டம்களும் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம்’’ என்கிறார் மருத்துவர் காமராஜ்.