முதலிரவு அப்போ பீரியட்ஸ்; உறவு வெச்சுக்கலாமா? | காமத்துக்கு மரியாதை - 217
அந்த மணமக்களுக்கு முதல் நாள் இரவு ரிசப்ஷன்; மறுநாள் காலையில் திருமணம். திருமணம் நிச்சயம் நடந்ததோ இரண்டு மாதங்களுக்கு முன்னால். நிச்சயமான நாளிலிருந்தே எக்கச்சக்க லவ் டயலாக்களுடன் திருமண நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு, முதலிரவு எதுவுமே நிகழாமல் கடந்துபோனது. வழக்கமான வேலைகளுடன் குல தெய்வம் கோயிலுக்குப் போவதில் ஆரம்பித்து, புடவைக்கடை, நகைக்கடை, பியூட்டி பார்லர் என அலைச்சல் அதிகமானதால், திருமணத்தன்று திடீரென பீரியட்ஸ் ஆக, முதலிரவு தள்ளிப்போடப்பட்டது. முதலிரவு அன்று திடீரென பீரியட்ஸ் ஆவது நார்மல்தானா, அப்படி நிகழ்ந்தாலும் உறவு வைத்துக்கொள்ளலாமா...பாலியல் மருத்துவர் காமராஜ் அவர்களிடம் கேட்டோம்.
''திருமணத்தன்னிக்கு திடீர்னு பீரியட்ஸ் ஆகுறதுக்கு முழு காரணம், ஸ்டிரெஸ்தான். அரேஞ்டு மேரேஜில் மட்டுமல்ல, லவ் மேரேஜில்கூட இது நடக்கலாம். வாழ்க்கையோட மிகப்பெரிய முடிவு திருமணம். மாப்பிள்ளையோட பேசிப் பழகி இருந்தாலும், பழக்கமில்லாத நபர்களோட ஒரே வீட்டுக்குள்ள இருக்கப்போறோம்கிற பயம் காரணமாகவும் ஸ்டிரெஸ் வரலாம். இந்த ஸ்டிரெஸ்னால, ஹார்மோனல் இம்பேலன்ஸ் ஏற்பட்டு பீரியட்ஸ் வர்றதும், அது சில நாள் போறதும் ரொம்ப ரொம்ப நார்மல். ஃபர்ஸ்ட் நைட்ல பீரியட்ஸ் ஆகிடுச்சு; செக்ஸ் வெச்சுக்கலாமான்னு கேட்டா, தாராளமா வெச்சுக்கலாம். இதனால, எந்தப் பிரச்னையும் வராது.
சில லேடீஸ்க்கு முதலிரவு முடிஞ்சப்பிறகு பீரியட்ஸ் வரும். இதுவும் நார்மல்தான். முதல் தடவை பெனிட்ரேஷன் நடக்கிறப்போ, ஹைமன் அப்படிங்கிற ஜவ்வு கிழியுறதால பீரியட்ஸ் மாதிரியே தொடர்ந்து ரத்தம் வரலாம். பயந்துபோய் டாக்டரைப் பார்க்க வருவாங்க. ஹைமன்பற்றிய ஒரு விஷயத்தை எல்லோரும் தெரிஞ்சிக்கணும். ஹைமன் ஜவ்வு துளையே இல்லாம, திக்கா, மெல்லிசா, சின்னச்சின்ன துளைகளோட, பிறை நிலா போல பலவகைகள்ல இருக்கும். இதுல, ஹைமன் தடிமனாக இருந்தா தான் அது கிழியுறப்போ ரத்தப்போக்கு ஏற்படும். இதை சிலர் பீரியட்ஸ்னு நினைச்சிக்கிறாங்க. இதுக்கெல்லாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்ல.
மணப்பெண்ணுக்கு மட்டுமல்ல, மணமகனுக்குக்கூட தேவையில்லாத டென்ஷனை ஏற்படுத்தலாம். சில ஆண்கள் இயல்பிலேயே ரொம்ப எமோஷனல் ஆகுற கேரக்டரா இருப்பாங்க. அவங்களுக்கு முதலிரவு அன்னிக்கு அட்ரினல் சுரப்பு அதிகமா இருக்கும். இதனால, தலைவலி, உடம்பு வலி, உடல் நடுக்கம்கூட வரலாம். செக்ஸ் வெச்சுக்க பயப்படுறதால தான் இதெல்லாம் மணமகனுக்கு வருதுன்னு நினைச்சிக்கக்கூடாது. இதுக்குதான் கல்யாணத்துக்கு முன்னாடி, ஒரு சிட்டிங் கவுன்சிலிங் எடுத்துக்கிறது நல்லதுன்னு டாக்டர்ஸ் நாங்க சொல்லிக்கிட்டே இருக்கோம்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.