திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது: அதிமுக
சிறந்த வாழ்க்கையா? மாதம் 1,500 ரூபாயா? பெண்களுக்கு பிரியங்கா கேள்வி!
பெண்கள் சிறந்த வாழ்க்கைக்காக வாக்களிக்க வேண்டுமே தவிர மாதம் ரூ.1500 கிடைக்கிறது என்பதற்காக வாக்களிக்கக் கூடாது என காங்கிரஸ் பொதுச்செயலாளரும் வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்துக்கு நவ. 20ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி கட்சிரோலி மாவட்டத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது,
''ஆளும் கட்சியினர் உண்மையான பிரச்னையிலிருந்து மக்களை திசைதிருப்பும் பணிகளைச் செய்கின்றனர். இளைஞர்கள் திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர். அதற்காக உழைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இதில் அரசு கவனம் செலுத்தவில்லை. காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசு தவறிவிட்டது.
மகாராஷ்டிரத்தின் பல திட்டங்கள் குஜராத்துக்கு மாற்றப்பட்டதால் மகாராஷ்டிரத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
நாட்டில் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காண பாஜக தவறிவிட்டது. இதற்கான விளைவுதான் இளைஞர்களின் தற்கொலை.
பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறந்த வாழ்க்கைக்காக வாக்களிக்க வேண்டுமே தவிர மாதம் ரூ.1500 கிடைக்கிறது என்பதற்காக வாக்களிக்கக் கூடாது.
நாம் ஒன்றாக இருந்தால், பாதுகாப்புடன் இருப்போம் என பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஆனால், இந்த நாட்டில் உண்மையில் பாதுகாப்புடன் இருப்பது அதானிதான். பிரச்னைகளில் சாமானிய மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும்போது, மக்களுக்கான அரசின் கஜானாவை இயக்கிக்கொண்டிருப்பது அதானிதான் என்பதை நாடறியும்.
விமான நிலையம், துறைமுகம் என நாட்டின் பெரும்பாலான சொத்துகள் அதானி குழுமத்தின் வசம் உள்ளது. தேசிய சொத்துகளை தனிநபருக்கு ஒதுக்குவதை விடுத்து, நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் நமது தலைவர்கள் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருந்தனர். ஆனால், பாஜக ஆட்சியில் இந்தப் பொறுப்பு இல்லாமல் போய்விட்டது. அமைச்சர்களும், முதல்வர்களும் ஏன்? பிரதமர் கூட மக்களிடம் பதில் சொல்ல முடியாதவர்களாக மாறிவிட்டனர்'' என பிரியங்கா காந்தி விமர்சித்தார்.