தில்லியில் 1 மணி நேரம் வெளியே போனால்கூட நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்!
புதுதில்லியில் மாசடைந்துள்ள காற்றை வெறும் 1 மணி நேரம் சுவாசித்தால் போதும், நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.
தேசியத் தலைநகர் மற்றும் அதனையொட்டிய என்சிஆர் பகுதியில், ஒரு வாரமாகவே காற்று தரக் குறியீடு 400-க்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளது. இன்று(நவ. 17) காலை 8 மணி நிலவரப்படி, தில்லியில் காற்று தரக் குறியீடு 428-ஆக பதிவாகியிருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மாநகரில் முக்கிய பகுதிகளான எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதியில் அடுக்குமாடிக் கட்டடங்களை சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களும், அதிலும் குறிப்பாக நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் செல்வோர், எதிரே வரும் வாகனங்களை சரியாகப் பார்க்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இத்தகைய மாசுபாடடைந்த சூழலில், வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது, வெறும் 1 மணி நேரம் மாசடைந்த காற்றை சுவாசித்தால்கூட, நுரையீரலும் இதயமும் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.
மாசு துகள்கள் 2.5, 10 ஆகியவை கலந்துள்ள சுற்றுச்சூழல் காற்றால் உடலில் கடும் பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையளிக்கும் நிலைமை நோயாளிகளுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, ஆஸ்துமா, சிஓபிடி நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருவதும் அதிகரித்துள்ளது. இதய பாதிப்புள்ளோர், செயற்கை சுவாசக் கருவிகளின்றி மூச்சுவிடுவது பெரும் சிரமமாக இருப்பதாக கூறுவதையும் காண முடிகிறது.
மாசு நுண் துகள்கள் கலந்துள்ள இத்தகைய காற்று உடலுக்குள் செல்வதால், மைக்ரேன், சைனஸ் ஆகிய பாதிப்புகளால் தலைவலி உண்டாகும். ஆஸ்துமாவால் பாதிகப்பட்டுள்ளோருக்கு அந்நோயின் தீவிரம் மேலும் அதிகரிக்கும். ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இவையனைத்தும் உடனடியாக உடலில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், ஓரிரு நாள்களில் உடலில் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுவதை உணர முடியும். தொண்டை கரகரப்பு, மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய பாதிப்புகளை உடனடியாகவே உணரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
காற்று மாசுபாடு ஒரு தீவிர பாதிப்பு என்பதை மக்கள் இன்னும் உணராமல் இருப்பதாகவே மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். காற்று தரக் குறியீடு எண் அதிகரிக்கும்போது, (380 என்ற அளவைக் கடந்தால் கூட மிகுந்த அபாயமானது), ஆரோக்கியமான நபர்களும்கூட நுரையீரல் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். நுரையீரல் வீக்கம், நுரையீரல் திசுக்கள் அழிவது ஆகிய பாதிப்புகள் உண்டாகும்.