கரூர் பலி: காங்கிரஸ் ரூ. 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!
கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் பகிர்ந்தளிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி, பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆறுதல் தெரிவித்தார் .
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை, ”கரூர் சம்பவம்போல் வேறு எங்கேயும் இதுபோல நடக்கக் கூடாது, முதல்வரின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ. 1 கோடி நிவாரணத் தொகையை எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக வழங்கயிருக்கிறோம். இது முதல்கட்ட நடவடிக்கை மட்டுமே, இரண்டாம் கட்டமாக மக்களவை உறுப்பினர் ஜோதி மணியிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்” என்றார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அடுத்த 3 நாள்களுக்கு துக்கம் கடைபிடிப்பதோடு, நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்படும் என்று, சமூக வலைதளப் பக்கத்தில் கு.செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கரூர் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை