செய்திகள் :

கரைகண்டபுரம் ஈசனை நாளை வணங்கினால் கரைந்துபோகும் கர்மவினைகள்; என்ன விசேஷம்?

post image

வழியிடையில் காவிரி நதியில் வெள்ளம் கரைபுரண்டோடியது. செய்வதறியாது தான் நின்ற தென் கரையிலேயே அம்பிகை சிவபூஜை செய்திட்டாள். அன்னையவள் நின்று ஆவடுதுறையின் கரையைக் கண்ட இடமே தற்போது 'கரைகண்டம்' என்ற‌ பெயரில் வழங்கப் பெறுகின்றது.

கரைகண்டபுரம் ஈசன்

எல்லாம் வல்ல பரம்பொருளான ‍‍‍‍சிவபெருமான் ஜீவர்கள் உய்யும்வண்ணம் நிகழ்த்தியருளிய அலகிலா திருவிளையாடல்கள் பல. அவற்றுள் ஒன்று திருமாலுடன் சொக்கட்டான் ஆடிய நிகழ்வு. இவ்விளையாட்டின் நடுவர் அம்பிகை. திருமாலுக்குச் சாதகமாக அம்பிகை பரிந்துரைக்க பெருமான் காரண நிமித்தமாகச் சினந்து அம்பிகையைப் பசுவாக பூமியில் திரியும்படி சபித்தார்.

பசுவுரு கொண்ட அம்பிகை காசியில் துவக்கி காவிரிக்கரைத் தலங்களினூடே தனது நெடிய பயணத்தினைத் தொடர்ந்தாள். தலங்கள்தோறும் சிவபூஜை செய்தவளாகப் பயணித்த அன்னை தெற்கு நோக்கி வந்த முதல் காவிரிக்கரைத்தலம் தேரழுந்தூர். அவ்வரிசையில் தொழுதாயங்குடி, அசிக்காடு, அன்னியூர், மாந்தை, கோமல், திருக்கோழம்பம் ஆகிய பல தலங்கள் அம்பிகை பசுவுருவில் பூஜித்த பேறு உடையவை.

சிவ ராஜதானியானதும்; நவகோடி சித்தர்கள் தவமியற்றியதுமாகிய மாசிலாமணீசர் என்ற திருநாமத்துடன் சுயம்பு லிங்கத்திருமேனியராகப் பெருமான் விளங்கிடுவதுமான திருவாவடுதுறையில் அம்பிகையின் பசுவுரு நீங்கப் பெற வேண்டும் என்பது ஈஸ்வர சித்தம். பூமியிலுள்ள ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் கோரூபாம்பிகையாகிய

அம்மையின் திருவடிகள் இத்துணைத் தலங்களில் படவேண்டும் என்பதே இத்திருவிளையாடலின் மறைபொருள். திருக்கோழம்பத்தில் பால் சொறிந்து அபிஷேகித்தபோது, கோரூபாம்பிகையின் குளம்பு ஸ்வயம்பு லிங்கத் திருமேனியின் சிரசில் பட்டது. அம்மையின் ஸ்பரிசம் பட்டவுடன் லிங்கத்திலிருந்து சிவபெருமான் ஆவிர்பவிக்க, அதைக்கண்டு மருண்ட கோரூப நாயகி திருவாவடுதுறைத் திசையை நோக்கி வெருண்டோடினள்.

கோரூப நாயகி

வழியிடையில் காவிரி நதியில் வெள்ளம் கரைபுரண்டோடியது. செய்வதறியாது தான் நின்ற தென் கரையிலேயே அம்பிகை சிவபூஜை செய்திட்டாள். அன்னையவள் நின்று ஆவடுதுறையின் கரையைக் கண்ட இடமே தற்போது 'கரைகண்டம்' என்ற‌ பெயரில் வழங்கப் பெறுகின்றது.

"இதோ அத்தன் இங்கேதான் இருக்கிறார்" என திருவாவடுதுறையைத் தனது அன்னைக்குச் சுட்டிக் காட்டிய விநாயகப் பெருமான் 'அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர்' என்ற நாமந் தாங்கி அந்த எல்லையிலேயே நிலைபெற்று விட்டது சுவாரசியமான உப தகவல்.

சூரபதுமன் எனும் அசுரன் தான் பெற்ற‌ வரத்தின் பலத்தினால் மூவுலகங்களையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த சமயம் அது. தேவலோகத்தினை விட்டு நீங்கிய இந்திரன் பூலோகத்தில் சீர்காழிப்பதியில் மறைந்திருந்து சிவபெருமானை நோக்கித் தவமியற்றினான். தாம் இல்லாத காலத்தில் இந்திராணிக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஹரிஹர புத்திரரான தர்மசாஸ்தாவிடம் இந்திராணிக்கு காவல் இருக்க விண்ணப்பம் செய்து கொண்டான் இந்திரன். காவிரிநாட்டின் பல தலங்களில் இந்திராணியும் சிவபூஜை செய்து வந்தாள்.

கரைகண்டம் ஸ்ரீவிஸ்வநாதர்

தலங்கள் தோறும் தர்மசாஸ்தா இந்திராணிக்குக் காவலாக உடன் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்திராணியைத் தன்னுடைய சகோதரனுக்குப் பரிசாகக் கொண்டு போகும் தீயஎண்ணத்தில் துர்முகியுடன் அஜமுகியும் பூலோகத்திற்கு விரைந்து வந்தாள். வேத்ரவனமாகிய கோடிகா தலத்தில் சிவபூஜையில் இருந்த இந்திராணியை வலுக்கட்டாயமாக இழுத்த அஜமுகியின் கரங்களை, தர்மசாஸ்தா சினத்துடன் தனது வாளால் வெட்டி தூர வீசினார். அக்கரங்கள் போய் விழுந்த இடத்திற்கு 'கரகண்டம்' என்ற பெயர் உண்டாயிற்று. (கரம் - கை; கண்டம் - துண்டாதல்)

கரைகண்டம் ஸ்ரீ விசாலாக்ஷி

அதுவே பின்னாட்களில் கரகண்டம் என்று வழங்கப் பெறலாயிற்று. செய்தி அறிந்து வந்த இந்திரன் இந்திராணியுடன் தர்மசாஸ்தா வினைத் துதித்துப் போற்றினர். சிவனாரின் கட்டளைப்படி, அவர் கோடிக்கா (இன்றைய திருகோடிக்காவல்) தலத்திலேயே நிலைபெற்றமர்ந்தார் என்பது துறைசைப் புராணத் தகவல். மலையாள தேசத்திலிருந்து வந்த இந்த ஐயன், திருகோடிக்காவின் காவல் தெய்வமாக 'மஞ்சினி சாஸ்தா' என்ற நாமத்துடன் இன்றளவும் கொண்டாடப் பெறுகிறார்.

இத்துணைப் புராணப் பெருமைகள் நிறைந்த கரைகண்டம் ஸ்ரீ விசாலாக்ஷி சமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயமானது திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தார் பரிபாலனத்தில் விளங்குகின்றது. இவ்வாலயம் 14 - ம் நூற்றாண்டில் கற்றளியாக்கப் பெற்றிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

மூலமூர்த்தியாகிய ஸ்ரீ விஸ்வநாதர் உருவில் சிறியரான ஸ்வயம்பு. ஆயினும் மிக வரப்பிரசாதி. பசுவாக வந்த அம்மையின் மாயையை நீக்கி கோமுத்திக்கான தலத்தினைக் காட்டியருளியவர். இத்தலத்தில் வழிபடுவோருக்கும் கர்மவினைகளைப் போக்கி பிறவிகளை நீக்கி அருளுவதாக ஐதீகம்.

அன்னை விசாலாட்சி கண்கண்ட பேசும் தெய்வம். சிவாலய முறைப்படி அமைக்கப்பெற்ற உபசந்நிதிகள். ஆலயத்திற்கு எதிர்ப்புறம் காவிரி நதியின் உபநதியாகிய வீரசோழன் ஆறு பாய்கிறது. பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி இவ்வாற்றிலேயே தீர்த்தம் அளிப்பது வழக்கமாக உள்ளது. இத்தலத்திற்குரிய விருட்சம் பலா. மூர்த்தி சிறியதாக இருப்பினும் கீர்த்தி பெரியதாகக் கொண்டு விளங்கிடும் இவ்வாலயத்தில் எதிர்வரும் ஐப்பசி 07, புனர்பூசம் கூடிய வியாழன் (24.10.2024) அன்று சம்வத்ஸராபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. அவ்வமயம் காலை விசேஷ ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் மற்றும் இரவு திருக்கல்யாணம் ஆகியன மிகச்சிறப்பாக நிகழ்த்தப்பெற உள்ளன‌.

சிறப்பாக நிகழவுள்ள இவ்வைபவத்தில் அன்பர்கள் பங்கேற்கலாம். இயன்றவர்கள் ஆலயத் திருப்பணிகளுக்கும்; வருடாந்திர உற்சவாதிகளுக்கும் இயன்ற பங்களிப்பினைச் செய்து திருவினருளோடு குருவினருளையும் பெறலாம்.

எப்படிச் செல்வது..? திருவாவடுவதுறைக்கு அருகில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம். கும்பகோணம் - ஆடுதுறை வழியாக நேரடியாகவும் வரலாம்.

சுவாமிமலை: பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றிய விவகாரம்: இருவர் பணியிட மாற்றம்; அமைச்சர் சொன்னது பொய்யா?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் 4ம் படை வீடாகும். இக்கோயிலில், மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று வெளி மாநில, மாவட்டங்களைச் ... மேலும் பார்க்க

``எல்லாம் ஐயப்பன் அருள்... பல ஆண்டு ஆசை நிறைவேறி உள்ளது'' சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி!

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 21-ம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோ... மேலும் பார்க்க