கலங்கரை விளக்கம் - நீலாங்கரை இடையே கடல் பாலம்: அமைச்சர் எ.வ. வேலு
கலங்கரை விளக்கம் மற்றும் நீலாங்கரை இடையே 15 கி.மீ. தூரத்திற்கு கடல் பாலம் அமைக்கப்படும் என்று பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேரவைத் துணை தலைவர் பிச்சாண்டி, “நவி மும்பையில் கட்டப்பட்ட அடல் சேது பாலம் போன்று, இங்கும் பட்டினப்பாக்கத்தில் இருந்து மகாபலிபுரம் வரை கடல் பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம், இடம் கையகப்படுத்தும் பணியும் இருக்காது.
மும்பையில் பாலங்கள் அமைப்பதற்கு கடல்சார் வாரியம் அமைக்கப்பட்டு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்திலும் கடல்சார் வாரியம் அமைக்கப்படுமா” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க: இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து இயக்கப்படும்?
இதற்கு பதிலளித்து பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
தமிழகத்தில் கடல்சார் வாரியம் முன்னதாகவே உள்ளது. அதன்மூலம் சிறு துறைமுகங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மும்பை பாலத்தில் நானும் பயணித்தேன். அதன் விளைவாக, கலங்கரை விளக்கத்தில் இருந்து மகாபலிபுரம் என்பது நீண்ட தொலைவாக இருப்பதால், முதல்கட்டமாக கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை இடையே 15 கி.மீ. தூரத்திற்கு கடல் பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.” என்று தெரிவித்தார்.