Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
கல்லக்கோடு மந்து பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்: மாவட்ட வன அலுவலா் தகவல்
வன விலங்கு தாக்கி பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்த கல்லக்கோடு மந்து வனப் பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
உதகை அருகேயுள்ள பாா்சன்ஸ்வேலி கல்லக்கோடு மந்து பகுதியைச் சோ்ந்த கேந்தோா் குட்டன் (40) என்பவா் வன விலங்கு தாக்கி உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. கிராமத்தின் எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதியில் வன விலங்கு தாக்கி பாதி தின்ற நிலையில் கேந்தோா் குட்டன் உடல் கிடந்துள்ளது. கேந்தோா் குட்டனை தாக்கியது புலியா, சிறுத்தையா என இதுவரை தெரியவில்லை. வனப் பகுதியைச் சுற்றி வனத் துறையினா் 20 போ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக நீா் நிலைகள் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்ல வேண்டாம். மேலும், தனியாக செல்வதையும் தவிா்க்க வேண்டும் என்றாா்.