செய்திகள் :

காந்தி கணக்கு - சிறுகதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நல்ல பிரம்ம முகூர்த்த அதிகாலை வேளையில் முத்தம்மாக்கிழவி செத்துப் போயிருந்தாள். சேதி கசிந்ததும் பெண்களும் ஆண்களுமாய் ஆன சிறு கூட்டம் அந்த ஓட்டுவீட்டின் வாசலில் கூடியது.

கிழவி கிராமத்தில் ஒண்டியாகத்தான் இருந்தாள். பக்கத்து டவுனில் பஞ்சம் பொழைக்கும் வாரிசுகள் வந்து தான் மேற்கொண்டு காரியம் ஆக வேண்டும் என நினைத்து ஊரார்கள் தயங்கி நின்றனர். ஊர்ப் பெரியாட்கள் செல்போனில் சொந்தங்களுக்குத் தாக்கல் சொல்லிக் கொண்டிருந்தனர். இளவல்கள் வாட்ஸப் குரூப்பில் இரங்கல் செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தனர்.

தகவல் கீழத்தெருவிற்குத் தெரிந்து கருப்பாயம்மாள் வந்து 'சவுண்ட்' விட்டபின்தான் கூட்டம் பரபரப்பானது.

" அடிச்சேய்.. நடு வீட்டுல பொணத்தைப் போட்டு ஆளாளுக்கு புல்லரிக்காம வாய் பார்த்துட்டு நிக்கிறீங்களேடீ.." என்று கத்தியபடி சேலையைத் திரட்டிச் செருகிக் கொண்டு மடமடவென சாவு வீட்டிற்குள் முதல் ஆளாக நுழைந்தாள் அவள். மந்திரப்பட்டவர்கள் போல அவள் பின்னாலேயே நான்கைந்து பெண்களும் உள்ளே சென்றனர்.

வீட்டிற்குள் முத்தம்மாக்கிழவி அவர்களுக்கு பெரிதாக வேலையெதுவும் வைத்திருக்கவில்லை. எண்ணையில் ஊறிய பம்பரக்கட்டை போல வைரம் பாய்ந்த உடம்பு அவளுக்கு.

சாதாரணக் காய்ச்சல் என்று சொல்லி வெறும் மூன்று நாள் படுக்கைதான். அவள் செத்துப்போய் விடுவாளென அவளே நினைத்திருக்க மாட்டாள்போல. விறகடுப்பில் அவள் காய்ச்சி வைத்திருந்த கஞ்சி புளிப்பேறியிருந்தாலும் இன்னும் கெட்டுப் போயிருக்கவில்லை. கட்டிய சேலை தவிர மற்றவைகள் துவைத்து மடித்து வைக்கப்பட்டிருந்தன.

'சாவுனா இப்படி வரனும்டீ' என்று பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

பெண்கள் ஆளும் பேருமாகச் சேர்ந்து வீடு ஒதுக்கி, பிணத்தைக் குளிப்பாட்டி, கோடியுடுத்தி, வடக்கு பார்த்து சாத்தி வைத்து விட்டு வெளியே வருவதற்குள், ஆண்கள் வாசலில் சாமியானா பந்தலைப் போட்டிருந்தனர்.

"அவ்ளோதான் ஊர்க்கடமை முடிஞ்சிருச்சு..உண்டானவன் இனி வந்து பார்த்துக்கிருவான்.." பந்தலின் மையத்தில் நின்று சேலையைத் தளர்த்தி விட்டவாறே சொன்னாள் கருப்பாயி.

சேர்களும், டுயூப் லைட்டுகளும் குட்டியானையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன.மேளகாரர்களுக்கு இனிமேல்தான் சொல்ல வேண்டும்.

"ஏட்டீ..இன்னைக்கு வியாழக்கிழமைதானே..நூறுநாள் வேலைக்கு இன்னைக்கு அட்டைய பதியலைன்னா ஒரு வாரத்திற்கு வேலை தர மாட்டான்டீ..

வா விருட்டின்னு..ஒரு எட்டு போயிட்டு வந்திருவோம்." கூட்டத்திலிருந்த இரு பெண்கள் நைசாக நழுவிச் சென்றனர்.

சற்று நேரத்தில் நடக்க முடியாத பெரிசுகளைத் தவிர பந்தலில் இருந்த மொத்த ஜனமும் இடம் பெயர்ந்து பஞ்சாயத்து ஆபிஸில் நின்றிருந்தார்கள்.

மூன்று வார்டுகள் சேர்ந்த பஞ்சாயத்தில் இன்றைய முறைக்கு இந்த வார்டில்தான் நூறுநாள் வேலை.

"நல்லா தோதான நாள் பார்த்துத்தாண்டி கெழவி மண்டையப் போட்டிருக்கு...


வேலைக்கு போனாப்புலயும் இருக்கும்..


எழவு கேட்டாப்புலயும் இருக்கும்.." பஞ்சாயத்து போர்டு ஆபீஸில் அட்டை வைக்கும் போது மேலத்தெரு கிருட்ணம்மாள் செத்துப்போன கிழவியை மெச்சிக் கொண்டிருந்தாள்.

அட்டை வைக்க உள்ளூர் ஆட்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா என்பதை ஒருவருக்கொருவர் கள்ளப் பார்வையில் உறுதிபடுத்திக் கொண்டனர்.

பக்கத்து வார்டு ஆட்கள் நடந்தும், ஆட்டோவிலும், ஸ்கூட்டியிலும் வந்து, அந்த பஞ்சாயத்து ஆபிஸின் வாசலில் கூடினார்கள். எல்லோர் கைகளிலும் அட்டை, சிறு மண் கொத்தி,சாப்பாட்டுக்கூடை, வாட்டர் கேன், சிலர் டச் போனோடும் கூட வந்திருந்தனர்.

மண்கொத்தி என்பது களைகொத்திக்கும் மண்வெட்டிக்கும் இடைப்பட்ட சைசில் லேசாகவும் நாகரீகமாகவும் வேலை செய்ய கண்டுபிடிக்கப்பட்ட "நூறுநாள் வேலைக்காலக் கருவி" ஆகும்.
"ஈயம் பூசுனது போலவும் இருக்கனும். பூசாதது போலவும் இருக்கனும்" என்பது போல, அதைவைத்து கொத்தும் போது மண்வெட்டியது போலவும் மண்வெட்டாதது போலவும் ரெண்டுங்கெட்டானில் வேலை முடியும்.

இன்று ஊர்மந்தையை ஒட்டிய குட்டையில் மழைநீர் சேகரிப்புக் குழிகள் தோண்டும் வேலை.

பஞ்சாயத்து கிளார்க்கு வரவுக்காக அட்டையை வரிசையில் வைத்து விட்டு, மந்தைப் புளியமர நிழலில் துண்டு விரித்து இடம் பிடித்தனர் வேலையாட்கள்.

தினமும் அங்கே பதிவாய் உறங்கும் மேய்ச்சல் ஆடுகள் பதறி எழுந்து வேறு இடம் தேடி அலைந்தன.

பஞ்சாயத்து கிளார்க்கு பத்து மணிக்கு வந்தான். ஒவ்வொருவராக கையெழுத்து வாங்கி ரேகை உருட்டி முடிந்ததும், ஒவ்வொருத்தருக்கும் கோமணத்துண்டு அளவிற்கு நிலத்தைப் பிரித்துக் கொடுத்தான்.

மீன்பிடித் திருவிழா போல மடமடவென குட்டைக்குள் இறங்கிய ஜனங்கள், மூடிமுழிக்கும் முன் அரைகுறையாக பேருக்கு நாளு வெட்டுகளை வெட்டிவிட்டு, உச்சி வெய்யிலுக்குள் கரையேறி விட்டனர்.

மந்தைப் புளிய மர நிழலுக்கு மறுபடியும் வந்து அமர்ந்தவர்கள், ஊர்ப் புறணிகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கத் தொடங்கினார்கள்.

முதலில், செத்துப்போன 'பேட்ச்மேட்' முத்தம்மாக்கிழவியின் அருமை பெருமைகளை ஒவ்வொருவராய் பேசினர்.போன வாரம் வரைக்கும் வேலைக்கு வந்த அவளது கடமை உணர்ச்சியைப் பாராட்டி அனைவரும் சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அடுத்ததாக, நடுத்தெரு சுப்புப்பாட்டிக்கும் அவள் கணவர் ராசுத்தாத்தாவுக்கும் இடையே நேற்று நடந்த பெருஞ்சமரைப் பற்றிய பேச்சு எழுந்தது.

அந்தப் பிரச்சினை நூறுநாள் வேலையை வைத்துத்தான் உண்டானதாம்.

முந்தாநாள் ஊருக்கு போய் விட்ட ஒத்தை வீட்டு முனியப்பன் தாத்தாவுக்கு நேற்றைய தினம் எந்த இடத்தில் வேலை என்று விவரம் தெரியவில்லையாம்.

நேற்று காலை தெருவுக்குள் விசாரிக்கப் போனவர்,
சுப்புப்பாட்டி ராசுத்தாத்தாவுக்கு சோறு வைத்துக்கொண்டிருந்தபோது, "ஏய் சுப்பம்மா..நாம இன்னைக்கு எந்த ஓடைக்குப் போகனும்?" என்று வாசலில் நின்று கொண்டு விவரமில்லாமல் கத்தினாராம்.

சாப்பிட்ட தட்டை விசிறியடித்து விட்டு கோவமாய் கிளம்பிப் போன ராசுத்தாத்தா, நேற்று ராத்திரிக்கு போதையோடு திரும்பி வந்து வில்லங்கம் வைத்து விட்டாராம்.. தீர்த்து விடச்சொல்லி..

என்ன இருந்தாலும் பெரியாம்பளைக்கு இந்த பிராயத்தில சந்தேகம் வரலாமா என்று பெண்கள் சிரித்து சிரித்து மாய்ந்தனர்.

அகடவிகடியான மச்சுவீட்டு சீத்தாப்பாட்டியை சுற்றிலும் எப்போதும் ரசிகர் கூட்டம் இருக்கும்.

நூறுநாள் வேலை பணம் எடுக்க அவள் வங்கிக்கு போன போது வங்கி அதிகாரி ஒருவர், குமரிப் பெண் வாடிக்கையாளருடன் எப்படி குலைந்து குலைந்து பேசினார் என்பதையும், இவளைப் பார்த்து எப்படி எரிந்து எரிந்து விழுந்தார் என்பதையும் அவள் நடித்துக் காட்டிக் கொண்டிருந்தாள்.

முகத்தை அஷ்ட கோணலாக்கி வங்கி அதிகாரி போல் விரைப்பாக நின்று அவள் செய்த பாவனைகளைப் பார்த்து எல்லாரும் கைகொட்டிச் சிரித்தனர்.

இப்படித்தான் போனமாதத்தில் வங்கிக் கணக்கில் பணம் ஏறிவிட்டதா என்று பார்க்கப்போன மூன்றாவது வார்டு வெள்ளைச்சாமி, பஸ்ஸில் இறங்கி எதிர்ப்புறம் இருந்த வங்கிக்குச் செல்ல சாலையைக் கடப்பதற்குள் சொகுசுக்கார் தட்டி சொர்க்கம் போய் சேர்ந்து விட்டார்.

பேச்சினூடே அந்த விஷயத்தை யாரோ ஞாபகப்படுத்த சக ஊழியர் மறைவை நினைத்து உச்சுக்கொட்டியது சபை.

இரண்டு பெரியாம்பிளைகள் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். நாலைந்து பார்வையாளர்கள்  சுற்றி அமர்ந்து கொண்டு ஆடுபவர்களுக்கு சாவி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

செல்போன் நோண்டத் தெரிந்த இளம் அம்மணிகள் யாரையும் தொந்தரவு செய்யாமல் தனியே அமர்ந்து செல்போனில் சீரியல், இன்ஸ்ட்டா ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தனர்..

"அதென்ன கருமமோடீ..பிக் பாஸோ.. கப் பாஸோ.. நூறுநாளு ஒரு ரூமுக்குள்ள ஆம்பிளை பொம்பளைனு எல்லாரையும் வரைமுறையில்லாம அடைச்சு வெப்பாங்களாம். வாயவெச்சு சும்மா இருக்கவங்களுக்கு லட்சத்தில சம்பளமாம்.

ராத்திரி முழுசும் அந்தக் கொடுமையத்தான் என் மகளும் மருமகனும் பார்த்திட்டு இருக்குதுங்க..நாமளும்தான் நூறுநாளு இந்த வெய்யிலுள லோலுப் படுறோம்.. இருநூறு ரூபாய் சம்பளத்துக்கு.."


தெற்குத்தெரு வேலாத்தாள் நீட்டி முழக்கி ஆவலாதிப் பட்டாள்.

ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக அமர்ந்து கொண்டு ஒவ்வொரு குழுவிலும் ஒரு கருப்பொருளில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.

அப்போது அவ்வழியாக வடக்கூருக்குச் செல்ல
சைக்கிளை உருட்டி  வந்த 'சமரசம்' அண்ணாச்சி, மர நிழலில் சற்று ஒதுங்கி நின்று கொண்டு, தன் சிவப்புத்துண்டால் வியர்வையைத் துடைத்துவாறே, உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து பொதுவாய்க் கேட்டார்.


"இப்படி சும்மா உட்கார்ந்திருக்கிறதுக்கு வரத்து ஓடையில நாலு செடி செத்தையைப் பிடுங்கலாமில்ல.. கவர்மெண்ட் காசுதான விரயமாகுது" என்று.

பதிலுக்கு வாயாடியான 'பிரசிடெண்ட்டோட  கொழுந்தியா' துடுக்காக பதிலுரைத்தாள்.


"லட்சத்தில சம்பளம் வாங்கிகிட்டு சேரை தேய்ச்சிட்டு இருக்காங்களே ஆபிசர் மாருக, மந்திரி மாருக அவுங்களும் கவர்மெண்ட் சம்பளம் தான் வாங்குறாங்க..
நீருதான் தினமும் மனுக்கொடுக்க அங்க போறீருள்ள..
அவுங்ககிட்ட போயிக் கேளுங்க.. ஏதாவது பிடுங்கச் சொல்லி..நாங்க பிடுங்கிறோம்.


அங்க மடைதொறந்து வெள்ளமாய்ப் போயிட்டிருக்கு.. உமக்கு இத்துனூண்டு ஒழுகல் தான் தெரியுதாக்கும்.."

அவளைப்பற்றி முன்பே தெரிந்து வைத்திருந்த சமரசம் அண்ணாச்சி, மேற்கொண்டு எதுவும் வாய் கொடுக்காமல் சைக்கிளை எடுத்துக் கிளம்பிவிட்டார்.

"இளந்தாரிப் பசங்க எல்லாம் குடும்பம் குட்டியோட டவுனுக்கு போய்ட்டாங்க.. நாம காலம்போன காலத்தில இந்த ஊரைக் காத்துக்கிட்டு கிடைக்கிற கஞ்சியைக் குடிச்சிட்டுக் கெடக்கோம்.

ஊருல முன்னப் போல வெள்ளாமை வேலையா இருக்கு. சம்சாரிகள் எல்லாம் நட்டத்தில முழுகிட்டாங்க.. ஏதோ புண்ணியவானுங்க இந்த நூறுநாள் வேலையக் கொடுத்து வயத்துப் பாட்டுக்கு சம்பளம் தாராங்க.. இந்த வரும்படி இல்லாட்டி என் மருமக எனக்கு கஞ்சி ஊத்துவாளா.." - சமுத்திரக்கனியாத்தா புலம்பினாள்.

"அவரை விடு ஆத்தா.ஏதோ சொல்லிட்டு போகட்டும்..பொழைக்கத் தெரியாத மனுசன்.
இவரு சேக்காளிங்க எல்லாரும் ஸ்கார்பியோ கார்ல சுத்துறாங்க..இவரு வெட்டி நாயம் பேசிட்டு இன்னும் சைக்கிள் தள்ளிக்கிட்டு இருக்காரு" - கூட்டத்திலிருந்து யாரோ சொன்னார்கள்

"நாமென்ன வேலைக்குச் சளைச்சவுங்களா.. நானெல்லாம் ஓராளு மட்டத்துக்கு ஒண்டியாளாத் தோண்டிருவேன்.. நான் மட்டும் மொறையா வெட்டி மித்தாளு வெட்டலைன்னா அம்மிக்கல்லு கொத்தின மாதிரியில்ல இருக்கும் வேலை.. ஊர் பொல்லாப்பு நமக்கு எதுக்கு.. ஊருக்கு ஏன்டது எனக்குன்னு வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன்" கண்ணுச்சாமி நல்லவர் போலப் பேசியதை எவரும் ரசிக்கவில்லை..

ஊருக்குள் சாவு மேளச்சத்தம் கேட்க ஆரம்பித்தது.

எங்கு மேளச்சத்தம் கேட்டாலும் சாமி அருள் இறங்கி விடும் போதும்பொண்ணு அக்காவிற்கு, இப்போதும் தலை சுத்திக்கொண்டு உடல் முறுக்கேறியது.

கை விரல்களை மடக்கி, உடலை இறுக்கி, அந்த பெருந்தெய்வ சக்தியை தன்னுள்ளேயே அடக்கி வைத்து, ஒரு செம்பு தண்ணீரைக் குடித்து 'ஏவ் ஏவ்' என தொடர் ஏப்பங்களை காற்றில் வெளியேற்றினாள் அவள்.அவளைப்பற்றி முன்னமே தெரிந்து வைத்திருந்த தோழிப் பெண்கள் தங்களுக்குள் பார்த்துக் கொண்டு நக்கலாய் சிரித்துக் கொண்டார்கள்..

இடையிடையே வேலையிருந்து நைசாக நழுவிச் சென்று, எழவு வீட்டிற்குப் போய், கார்த்திகை மாத அடைமழை மேகம் போல 'பாட்டம் பாட்டமாய்' அழுது விட்டு வந்தார்கள் சில பெண்கள்..

ஆண்களோ, எழவு வீட்டை நோட்டம் விட்டு "சரக்கு சப்ளையரைக்" கண்டுபிடித்து கட்டிங் போட்டு விட்டு திரும்பினர்.

மதியம் ஆனவுடன் சாப்பாட்டுக் கூடையில் கொண்டு வந்திருந்த ரேசன் அரிசி பாக்கெட் மாவில் சுட்ட தோசைகளைத் தின்றுவிட்டு அனைவரும் சற்று கண் அயர்ந்தனர்..

மாலை நாலு மணி ஆனதும் பஞ்சாயத்து கிளார்க் தள்ளாடியபடியே மந்தைக் குட்டைக்கு வந்து சேர்ந்தான். கரையின் மேல் நின்றபடியே குட்டையில் நடந்த வேலைகளை மேற்ப்பார்வை செய்தான்.

கையோடு வைத்திருந்த வருகைப் பதிவேட்டில் அட்டையைப் பதிந்து விட்டு ஒவ்வொருவருக்கும் திரும்பிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அதே சரியான நேரத்தில், மேளதாளத்தோடு சிங்காரித்த பாடையில், தன் இறுதிப்பயண பெரு வழிப்பாதையின் மையப்பகுதியான மந்தைக்கு வந்து சேர்ந்திருந்தாள் முத்துக்கிழவி.

பெண்கள் தங்கள் இடுப்புச்சேலைக்குள் அட்டையை மறைத்துக் கொண்டு முந்தியை வாயில் வைத்து விசும்பியபடியே இறுதிப் பயணத்தில் சேர்ந்து கொண்டனர். ஆண்கள் தங்களது அட்டையை 'கட்டிங்கோடு' சேர்த்து டவுசரில் பத்திரப்படுத்திக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கொண்டனர்.. எழவுக்கு வந்த டவுன் ஆள் ஒருத்தர் 'கிழவிக்கு நல்ல கூட்டமில்ல சேர்ந்திருக்கு' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்..

முத்தம்மாள் கிழவியின் வருகையை கண்ணால் பார்த்து உறுதி செய்து கொண்ட பஞ்சாயத்து கிளார்க், அவளுக்கும் வருகைப் பதிவில் 'பிரசண்ட்' போட்டு விட்டு, காந்தி படம் போட்ட அந்த 'ரிஜிஸ்டரை' டூவீலரின் பக்கவாட்டுப் பெட்டிக்குள் போட்டு மூடி விட்டு வண்டியைக் கிளப்பினான்.

சாவு ஊர்வலம் மந்தையைத் தாண்டியதும் சங்குச் சத்தம் பலமாகக் கேட்டது..

-கணேசன் குருவைய்யா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

கடல் தாண்டிய சொற்கள்: "விசித்திரமான இலைகளின் சுவையான தொடுதல்" -தோரு தத் | பகுதி 3

மாயமொழியில் எழுதப்பட்ட புராண இதிகாசங்கள், பழங்கதைப் பாடல்கள் வாசகர்களுடன் தொடர்புகொள்ளும்போது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்ல முடியும்?சிறுவயதில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்த தோழ... மேலும் பார்க்க

தமிழி நிரலாக்கப் போட்டி... கலந்துகொண்டு அசத்திய கல்லூரி மாணவர்கள்!

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டர்ட்அப் டிஎன், தமிழ் இணையக் கல்விக் கழகம், செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள், வாணி பிழைதிருத்தி, அக்ரிசக்தி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வளர்ந்து வரும் நவீ... மேலும் பார்க்க

`கலாசாரத் திருட்டு’ - `Seeing Red’ இயக்குநர் ஷாலினி மீது எழுத்தாளர் ஜெயராணி கதைத் திருட்டு புகார்

தமிழ் ஊடகத்துறையில் 25 ஆண்டுகளாக பத்திரிகையாளராகவும், பல கட்டுரை நூல்களின் ஆசிரியராகவும் இருந்து வருபவர் எழுத்தாளர் ஜெயராணி. தற்போது 'போதி முரசு' என்ற இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டுவருகிறார். இவருடைய... மேலும் பார்க்க

கடல் தாண்டிய சொற்கள்: `போரின் வலிதாங்கிய மனதின் குரல்' - கமலா விஜேரத்ன கவிதைகள்

சொல்வதற்கும் செய்வதற்கும் எவ்வளவோ இருந்தாலும் ஒரு பெண் போரின் வலிகளைப் பற்றி எழுதுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ஏன் இவ்வளவு சிரமப்பட்டு உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்? ஏன் அதை விவரித்து எழுதவேண்டு... மேலும் பார்க்க