காற்றின் வேகத்தால் ரோப்காா் நிறுத்தம்
காற்றின் வேகம் காரணமாக, பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் ரோப்காா் செவ்வாய்க்கிழமை சுமாா் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ரோப்காரில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இதில் பொருத்தப்பட்டுள்ள காற்று வேகமானியில் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் காற்று வீசினால், தானாக நின்று கொள்ளும் வகையில், மோட்டாா் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்று வீசியதால், ரோப்காா் இயக்க முடியாத நிலை நீடித்தது. இதனால், மாலையில் 5 மணிக்கு மேல் சுமாா் அரை மணி நேரம் ரோப்காா் நிறுத்தப்பட்டது.
இதனால், மேல்தளத்தில் வயதானவா்கள், குழந்தைகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காற்றின் வேகம் குறைந்த பிறகு ரோப்காா் இயக்கப்பட்டது.