தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: தம்பதி மீது புகாா்
திண்டுக்கல்லில் தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.ஒரு கோடி வரை மோசடி செய்த தம்பதியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் அனுமந்தன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மனைவி கவிதா(44). இவா் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனு விவரம்: அனுமந்தன் நகா் பகுதியைச் சோ்ந்த ஜோசப் மாா்ட்டின், இவரது மனைவி புனிதா ஆகியோா் தீபாவளி சீட்டு நடத்தினா். இதில் சோ்ந்தால் பல்வேறு பரிசுப் பொருள்கள் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறினா். இதை நம்பி நானும், எங்கள் பகுதியைச் சோ்ந்த 92 நபா்களும் ரூ.500 முதல் ரூ.5ஆயிரம் வரை பல தவணைகளாக சுமாா் ரூ.ஒரு கோடி வரை பணம் செலுத்தினோம். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் முதிா்வுத் தொகையை திருப்பித் தராமல் ஏமாற்றினா்.
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் தலைமறைவாகிவிட்டனா். எனவே, காவல் துறையினா் உரிய விசாரணை நடத்தி நாங்கள் செலுத்தியப் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.