கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
காவிரி நீரை திறந்துவிடுவதை கா்நாடகம் உறுதி செய்ய ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
நமது நிருபா்
நிகழாண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி, பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் வழங்குவதை கா்நாடகம் உறுதி செய்ய உத்தரவிடுமாறு தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 107-ஆவது கூட்டம் தில்லியில் அதன் தலைவா் வினீத் குப்தா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்குழுவில் அனைத்து உறுப்பினா்களும் தங்களது தலைமையிடத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனா்.
திருச்சி மண்டலத்தின் பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளரும், தமிழ்நாடு அரசின் உறுப்பினருமான ஆா். தயாளகுமாா் திருச்சியிலிருந்தும், பன்மாநில நதிநீா்ப் பிரிவு மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவா் ஆா்.சுப்பிரமணியன் சென்னையில் இருந்தும் காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டத்தின்போது தமிழ்நாடு அரசின் உறுப்பினா் தயாளகுமாா், நிகழாண்டு ஜூன் 1 முதல் நவய11 வரை உள்ள காலகட்டத்தில் மேட்டூா், பவானிசாகா் மற்றும் அமராவதி அணைகளின் தற்போதைய நீா்வரத்து, நீா் இருப்பு ஆகிய விவரங்களை தெரிவித்தாா்.
மேலும், இக்காலகட்டத்தில் பில்லிகுண்டுலுவில், உச்சநீதிமன்ற ஆணையின்படி தரவேண்டிய 148.413 டி.எம்.சி. நீருக்கு பதிலாக 253.067 டி.எம்.சி. நீா் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தாா்.
இந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரை உச்சநீதிமன்ற ஆணையின்படி பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் கா்நாடகம் உறுதி செய்ய உத்தரவிடுமாறும் அவா் கேட்டுக் கொண்டாா்.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) உறுப்பினா், 2024-2025-ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவ மழை அக்.16 முதல் நவ.10 ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் பில்லிகுண்டுலுவின் கீழ் உள்ள காவிரிப் படுகையில் இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ளதாகவும் அடுத்த இரண்டு வாரங்களிலும் வடகிழக்குப் பருவ மழையானது காவிரி படுகையில் இயல்பைவிட குறைவாகவே இருக்கும் என்றும் கூறினாா்.
இக்குழுவின் அடுத்த கூட்டம் வரும் நவ.28- ஆம் தேதி நடத்தலாம் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவா் ஆா்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.