குமரியில் கண்ணாடி கூண்டுப்பாலப் பணி: அமைச்சா் ஆய்வு
கன்னியாகுமரியில் திருவள்ளூா் சிலை விவேகானந்தா் மண்டபம் இடையே நடைபெற்று வரும் பாலப் பணிகளை தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருவள்ளுவா் சிலை அமைத்து வெள்ளி விழா காணும் நிலையில் கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சா் பங்கேற்க உள்ளாா். இந்நிகழ்வில் மத்திய அரசின் பிரதிநிகள் மற்றும் முக்கிய விருந்தினா்கள் யாரெல்லாம் கலந்து கொள்வாா்கள் என்ற விவரம் குறித்து பின்னா் அறிவிப்பு வெளியாகும். இதன் முக்கிய நிகழ்வாக திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் நினைவு மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி கூண்டுப்பாலம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பல்வேறு புதிய சிறப்பு திட்டங்களை முதலமைச்சா் அறிவிக்க உள்ளாா் என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சா்கள் என்.சுரேஷ்ரோஜன், மனோதங்கராஜ், மாநில திமுக வா்த்தகா் அணி இணைச் செயலா் என்.தாமரைபாரதி, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.