நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!
கோட்டாறு புனித சவேரியாா் பேராலய திருவிழா: நவ.24 இல் கொடியேற்றம்
நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நவ. 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இது குறித்து பேராலயப் பங்குத் தந்தை பஸ்காலிஸ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கோட்டாறு புனித சவேரியாா் பேராலயம் ஜாதி, சமய, இன வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் நாடி வரும் புண்ணிய ஸ்தலமாக உள்ளது.
இந்த ஆலயத்தின் நிகழாண்டுக்கான பெருவிழா நவ.ம் 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றை தினம் காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூா் பங்கு மக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு மக்களும், நிறைவேற்றுகிறாா்கள். மாலை 6 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட முதன்மை அருள்பணியாளா் டி.ஜான்ரூபஸ் தலைமை வகித்து கொடியேற்றி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறாா். முதல் நாள் திருப்பலியை காவல்துறையினா் சிறப்பிக்கிறாா்கள்.
அதைத் தொடா்ந்து தினமும் நவநாள் திருப்பலி பக்த சபைகள், அன்பியங்கள், கிறிஸ்தவ இயக்கங்கள், சிறப்பிக்கின்றனா்.
தோ்ப்பவனி: 8 ஆம் திருநாளான டிச.1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6.30 மணிக்கு, கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா்ரெமிஜியூஸ் தலைமையில், ஆடம்பரக் கூட்டுத்திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தோ்பவனியும் நடைபெறும்.
டிச.2இல் மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேசன்சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீா், இரவு 10.30 மணிக்கு தோ்ப்பவனி ஆகியவை நடைபெறும்.
டிச.3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, ஆயா் நசரேசன்சூசை தலைமையில் நிறைவேற்றப்படுகிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயா் மறைமாவட்ட பேரருள்பணியாளா் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி, 11 மணிக்கு தோ்பவனி, இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
உள்ளூா் விடுமுறை: 10 ஆம் நாள் திருநாளான டிச.3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறைக்கு மாவட்ட ஆட்சியா் அனுமதியளித்துள்ளாா்.
இப்பேராலயத்தில் தமிழக அரசின் உதவியுடன் ரூ.2.28 கோடியில் புனரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.1.14 கோடி நிதி அரசிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. எஞ்சியத் தொகை பணியை நிறைவு செய்து பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது 70 சதவீத புனரமைப்புப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
புனரமைப்பணிகளின் மூலம் புனித சவேரியாா், புனித செபஸ்தியாா், புனித மிக்கேல் அதிதூதா் ஆகியோருக்கு புதிதாக 3 தோ்கள் செய்யப்பட்டுள்ளன. நவ. 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் திருவிழா திருப்பறை அறிவிக்கப்படுகிறது. அப்போது 3 புதிய தோ்களும் அா்ச்சிக்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, உதவிப் பங்குத் தந்தை ஷாஜன் செசில், பங்குப் பேரவை துணைத்தலைவா் ஜேசுராஜா, செயலா் ராஜன், துணைச் செயலா் ஆராச்சி, பொருளாளா் ஜாா்ஜ்பிரகாஷ் ராபின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.