புதிய தலைமுறை முடக்கம்: `முதல்வரே, கருத்துச் சுதந்திரம் என்னவாகும்?’ - அ.குமரேசன...
கும்பகோணம்: ``அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை'' - சர்ச்சையான திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்நிலையில் பள்ளி மேம்பாட்டு நிதியில், பள்ளி வளாகத்தில் ரூ.34 லட்சம் மதிப்பில் இரு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை நேற்று ஆடுதுறை பேரூராட்சி பா.ம.க சேர்மன் ம.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கழிப்பறை திறந்து வைத்த பிறகு உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது ஒவ்வொரு கழிப்பறைக்கும் இடையே தடுப்பு சுவர்கள் இல்லாமல் இருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி பலரும் கழிப்பறை போட்டோவை பதிவிட்டு கமெண்ட் செய்தனர். இந்த விவகாரம் ஆடுதுறை பகுதியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து சிலரிடம் பேசினோம்,
"அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை சேர்மன் ம.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த கழிப்பறையில் ஒரு இடத்தில் கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட சிறுநீர் கழிப்பதற்கான பீங்கான் பேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் ஒவ்வொரு பேஷனுக்கும் இடையே தடுப்பு சுவரோ அல்லது தடுப்புகளோ அமைக்கவில்லை.

கிட்டத்தட்ட திறந்தவெளி கழிப்பறை அமைப்பில் அந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. போதுமான பைப் அமைத்து தண்ணீர் வசதியும் ஏற்படுத்தவில்லை. மாணவிகள் பயன்படுத்தப் போகிறார்கள், இது எப்படி வெளியே தெரியப்போகிறது என நினைத்தார்கள் போல.
கட்டுமானப் பணிகள் நடக்கும்போதும், முடிந்த பிறகும் பள்ளியின் தலைமை ஆசிரியர் யாரும் உள்ளே சென்று பார்க்கவில்லையா? ஒருவேளை பார்த்திருந்தால் அவர்கள் இதில் அலட்சியமாக இருந்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது.
இந்தப் பணியைச் செய்த ஒப்பந்ததாரர் யார், ஏன் இப்படிச் செய்தார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இது சர்ச்சையான பிறகு பணி முடிவதற்குள் திறந்துவிட்டதால் தடுப்பு அமைக்கும் பணி இனி நடக்கும் என்பதுபோல் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் சொல்வதுபோல் தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு கழிப்பறை பேசினுக்கும் இடையே தடுப்புச் சுவர் அமைப்பதற்கான இடம் இல்லை" என்றனர்.

இது குறித்து ம.க.ஸ்டாலினிடம் பேசினோம்,
"பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததை அறிந்து நான் சேர்மன் ஆன பிறகு புதிய கழிப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி மாணவர்கள், மாணவிகள் பயன்படுத்தும் வகையில் தனித்தனியாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதன் பணிகள் முடிவடைந்த நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக நேற்று திறக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் வைத்து அந்த பிளானில் உள்ளபடி ஒப்பந்ததாரர் கழிப்பறையை கட்டியுள்ளார்.
பிளானிலேயே தடுப்பு சுவர் இல்லை. ஆனால் தடுப்பு கட்டாதது போல் செய்திகள் வருகின்றன. விசாரித்ததில் யூரினலுக்கு தடுப்பு சுவர் அமைப்பது இல்லை என்கிறார்கள்.
மற்ற அரசு பள்ளிகளில் இது போன்று தான் உள்ளது. தடுப்பு அமைக்க வேண்டும் என்றால் மீண்டும் நிதி ஒதுக்கி அமைக்க வேண்டும்" என்றார்.