கும்பமேளா: "அந்த தண்ணீரை நீங்கள் குடியுங்கள் பார்க்கலாம்.." - ஆதித்யநாத்திற்கு பிரசாந்த் பூஷன் சவால்
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் புனித நீராடுவதில் மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தாக்கல் செய்த அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.
கடந்த 16-ம் தேதி நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) முதன்மை அமர்வு, உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை (UPPCB) கண்டித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மகா கும்பமேளாவின் பல்வேறு இடங்களில் மக்கள் குளிக்கும் தண்ணீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், அதிகளவு மலம், கோலிஃபார்ம் உள்ளிட்ட நச்சு பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
நீங்கள் சுமார் 50 கோடி மக்களை மல பாக்டீரியாக்கள் இருக்கும் மாசுபட்ட கழிவுநீரில் குளிக்க வைத்திருக்கிறீர்கள். குளிக்கவே தகுதியற்ற அந்தத் தண்ணீரை, மக்கள் குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் ஏதோ ஒருவித அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும், உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது மிகவும் தீவிரமான பிரச்னை" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் உரையாற்றிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ``நாங்கள் இங்கு விவாதத்தில் இருக்கும் இந்த வேளையில், 56.25 கோடிக்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே பிரயாக்ராஜில் புனித நீராடியுள்ளனர்... சங்கமத்தில் உள்ள நதி, குடிப்பதற்கு ஏற்றது. சனாதன தர்மம், கங்கை மாதா, இந்தியா, மகா கும்பமேளா ஆகியவற்றுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறும்போதும், போலி வீடியோக்களை பரப்பும்போது, அது இந்த 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவது போன்றது.
முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் மகா கும்பமேளாவை எதிர்த்து வருகின்றனர்... கடந்த அமர்வில், மகா கும்பமேளாவிற்கான விவாதங்களும், தயாரிப்புகளும் நடந்து கொண்டிருந்தன... நாங்கள் திட்டங்களைப் பற்றி விவாதித்து உங்கள் ஆலோசனைகளைப் பெற்றிருப்போம், ஆனால் நீங்கள் அவையை நடத்தவே விடவில்லை.
சனாதன தர்மம் தொடர்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது ஒரு குற்றமாக இருந்தால், எங்கள் அரசாங்கம் அந்தக் குற்றத்தைச் செய்து கொண்டே இருக்கும்" என்றார்.
உத்தரப்பிரதேச முதல்வரின் இந்தப் பேச்சுக்குப் பதிலளித்திருக்கும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ``கும்பமேளாவில் மக்கள் நீராடும் அந்த நதியிலிருந்து நீர் எடுத்து, மக்களுக்கு மத்தியில் குடிக்க வேண்டுமென யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அமைச்சரவைக்குச் சவால் விடுகிறேன்..." என அறிவித்திருக்கிறார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play