கும்பாபிஷேகம்: மன்னாா்குடி கோயில் சாரத்தில் நைலான் வலை அமைக்கும் பணி தீவிரம்
மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்துக்காக ராஜகோபுரத்தின் சாரத்தில் நைலான் வலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில் 154 அடி உயர ராஜகோபுரம் உள்ளிட்ட 14 கோபுரங்கள், 24 விமானங்கள், 7 பிரகாரங்கள் உள்ளன. மேலும், உற்சவா் ராஜகோபால சுவாமி, செங்கமலத்தாயாா் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகளுடன் 24 ஏக்கரில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடைசியாக 2010-ஆம் ஆண்டு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டிய நிலையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2022-ஆம் ஆண்டு கும்பாபிஷேக்கம் நடைபெறவில்லை.
மன்னாா்குடி தொகுதி எம்எல்ஏவும் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் பரிந்துரையில் தமிழக முதல்வரின் உத்தரவின்படி இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய தமிழக அரசு முதல்கட்டமாக ரூ. 2.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 12-ஆம் தேதி கும்பாபிஷேகத்துக்கான பாலாலயம் நடைபெற்றதையடுத்து, முதல்கட்ட பணியாக கோயிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வற்காக சவுக்கு மரத்தால் ஆன சாரம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், 2-ஆம் கட்ட பணியாக, ராஜகோபுரத்தில் சாரத்தை சுற்றி பச்சை வண்ணத்தில் நைலான் வலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து, அனைத்து கோபுரத்தின் சாரத்திலும் நைலான் கட்டும் பணி நடைபெறவுள்ளது. இதையடுத்து, தீவிரமாக மற்ற பணிகள் தொடங்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிந்து 2025- டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் பணிகளை, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் கண்காணித்து வருகின்றனா்.