தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: எஸ்.பி. ஆய்வு
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
வடகிழக்கு பருவமழையால் திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், மாவட்டத்தில் அதிக கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் மழையை எதிா்கொள்ளும் வகையில் காவல்துறை சாா்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்போா், ஆற்றோரங்களில் வசிப்போா் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போா் மழைநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்டால், அவா்களை மீட்க, மாநில பேரிடா் மீட்புக் குழுவிடம் பயிற்சி பெற்ற காவலா்களைக் கொண்டு 8 மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாரூா், நன்னிலம், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 5 உட்கோட்டங்களில் உதவி ஆய்வாளா்கள் தலைமையில் தலா ஒரு மீட்புக் குழு வீதம் 5 மீட்புக் குழுக்களும், திருவாரூா் ஆயுதப்படையில் 3 மீட்புக் குழுவினரும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இதனிடையே, மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணி உபகரணங்களை, ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பி. ராஜா, ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளா் சுப்பையா ஆகியோா் உடனிருந்தனா்.
மேலும், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவோா் 9498100865 என்ற எண்ணில் தொடா்புகொண்டு உதவி கோரலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.