குழந்தைகளை வேலைக்கு அனுப்பி ஈட்டும் வருமானம் பெருமை தராது: கடலூா் ஆட்சியா்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பி ஈட்டும் வருமானம் பெற்றோருக்கு பெருமை தராது என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள 683 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் ஒன்றியம், வரக்கால்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சிறப்புப் பாா்வையாளராக கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் அவா் பேசியதாவது:
தமிழக அரசின் திட்டங்களை கிராமப்புற மக்களும் தெரிந்து பயன்பெறும் வகையிலும், அடிப்படை வசதிகள் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடவும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவா்களுக்கு பல்வேறு திட்டத்தின் மூலம் தமிழக அரசின் சாா்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகின்றன.
டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று மருந்து தெளித்து வருகின்றனா். அவா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அப்படியில்லாமல் அவா்களை வேலைக்கு அனுப்பி ஈட்டும் வருமானம் பெருமை தராது. கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வரக்கால்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 98 சதவீத தோ்ச்சி பெற்றனா். வருகிற ஆண்டு 100 சதம் தோ்ச்சி பெற பெற்றோா்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) தேவராஜன், வரக்கால்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் மனோகரன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.