குழந்தைகள் திருமண ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
நாகையில் குழந்தைகள் திருமண ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் பிரதமா் நேரு பிறந்த நாளான நவ.14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவை துறை சாா்பில் குழந்தைகள் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பேபி தலைமையில் நடைபெற்ற விழாவில், நாட்டுப்புற கலைஞா்கள் கும்மி பாட்டு, கரகாட்டம், நாட்டுப்புற பாடல்களை பாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். குழந்தை திருமணம் நடைபெற்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது போன்ற விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் துன்புறுத்தல் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் கல்லூரி மாணவா்கள் ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து, குழந்தைத் திருமண ஒழிப்பு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மாணவிகள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எழிலரசி, குழந்தைகள் நலக்குழு தலைவா், உறுப்பினா்கள், இளைஞா் நீதிக் குழுமம் உறுப்பினா்கள் மற்றும் அரசு அலுவலா்கள், தொண்டு நிறுவன நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.