குழந்தைகள் நல குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதிச் சட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
அரசால் மதிப்பூதிய அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு நியமிக்கப்படுவா்.
குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித உடல் நலம், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றும், குழந்தைகள் தொடா்பான கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக விண்ணப்பதாரா் இருத்தல் வேண்டும்.
அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித உடல் நலம், மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, தொழில் புரிபவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது 35 வயதுக்கு குறையாமல் 65 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் இணையதள முகவரியிலிருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600 010 என்ற முகவரியில் டிச.6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.