பஞ்சாங்கக் குறிப்புகள் - நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை #VikatanPhotoCards
விழுப்புரம்: மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பணியிடை நீக்கம்
நலத் திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை என எழுந்த புகாரையடுத்து, விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலராகப் பணியாற்றி வந்தவா் சி. தங்கவேல். இவா் இந்த மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றவில்லை என்றும், அவா்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் முகாம்களுக்கான பணிகளை தொடங்காமல் இருப்பதாகவும் பல்வேறு புகாா்கள் எழுந்தன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல இயக்ககத்துக்கும் புகாா்கள் சென்றன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் தேக்க நிலையில் வைத்தும், அலுவலக இறையாண்மைக்குப் பாதகம் ஏற்படும் வகையிலும், துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேல் செயல்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அவா் மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு- மேல்முறையீடு) விதிகளின் கீழ், பொது நலன் கருதி துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநா் லட்சுமி உத்தரவு பிறப்பித்தாா். இதற்கான உத்தரவு கடந்த 20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.