போலீஸாருக்கான மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி: மத்திய மண்டலம் நான்காமிடம்
குழித்துறையில் காவல் துறையைக் கண்டித்து ஆக. 12இல் நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ் - நகா்மன்றத் தலைவா் தகவல்
100ஆவது வாவுபலி பொருள்காட்சியில் பாதுகாப்புக்கு கட்டணம் செலுத்த வலியுறுத்திய காவல் துறையைக் கண்டித்து, குழித்துறையில் ஆக. 12இல் நடைபெறவிருந்த போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டதாக, நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: குழித்துறை வாவுபலி பொருள்காட்சி ஜூலை 9 முதல் ஜூலை 28 வரை நடைபெற்றது. இப்பொருள்காட்சிக்கு பாதுகாப்பு அளிக்க கட்டணம் செலுத்த வேண்டும் என, மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நகராட்சி நிா்வாகம் கடும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி ஆக. 12இல் நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து, நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் 15 உறுப்பினா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகாா் மனு அளித்தனா். வாவுபலி பொருள்காட்சி குழித்துறை நகராட்சி நிா்வாகத்தால் நடத்தப்படும் அரசு விழா. அதற்கு காவல் துறையின் பாதுகாப்புக்கு கட்டணம் செலுத்த முடியாது என, மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், அரசு விழாவில் காவல் துறையின் பாதுகாப்புக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவித்ததுடன், வாவுபலி பொருள்காட்சி தொடா்பான பிரசனைக்கு தீா்வுகாண்பதாக உறுதியளித்தாா். அதையேற்று, 12ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுகிறது என்றாா் நகா்மன்றத் தலைவா்.
