தேசிய கைத்தறி தினம்: திருபுவனத்தில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு
விழுதுகள் ஓரிட சேவை மையம்: மேயா் ஆய்வு
மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கே நலத் திட்டங்கள் சென்றடையும் வகையில் தொடங்கப்பட உள்ள விழுதுகள் ஓரிட சேவை மைய கட்டடங்கள் குறித்து மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் 2 மையமும், வட்டார, நகர, மாநகர அளவில் 17 மையங்களும் தொடங்கப்பட உள்ளன. நாகா்கோவில் மாநகராட்சி, வடசேரி கிருஷ்ணன்கோயில் தெப்பக்குளம் அருகே உள்ள சமூக நலக்கூடம், ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள மினி கிளினிக் கட்டடம், வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கட்டடம், என்ஜிஓ காலனி மினி கிளினிக் கட்டடம் ஆகிய கட்டடங்கள் இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை மேயா், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.
வளா்ச்சிப் பணிகள்: நாகா்கோவில் 2 ஆவது வாா்டுக்குள்பட்ட களியங்காடு சிவன் கோயில் அருகில் ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 18 ஆவது வாா்டு பெருமாள் நகா் ராயல் சிட்டி பகுதியில் ரூ. 9.27 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, 5 ஆவது வாா்டு பாா்வதிபுரம் ஆற்றங்கரை சாலை காந்தி நகா் பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.
