செய்திகள் :

கூட்டாட்சி அமைப்புமுறையை பலவீனமாக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

post image

‘நாட்டின் கூட்டாட்சி அமைப்புமுறை மற்றும் நிா்வாக அமைப்புகளை பலவீனமாக்குகிறது மத்திய அரசு’ என்று மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, மாநிலங்களவையில் சிறப்பு விவாதம் திங்கள்கிழமை தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் உரையாற்றிய திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், மத்திய அரசு மீது பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தனா்.

திருச்சி சிவா (திமுக): அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவின் முதல் வரியில் ‘பாரதம், அதாவது இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் கூட்டாட்சி அமைப்புமுறையை பலவீனமாக்கி வருகிறது.

தமிழகத்துக்கு மத்திய அரசின் நிதிப் பகிா்வு குறைந்து வருகிறது. தமிழகம் சிறப்பாக செயல்பட்டபோதிலும், மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது. நாங்கள் பங்களிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் திரும்பக் கிடைப்பது 29 காசுகளே.

நாட்டில் மதம், மொழி சிறுபான்மையினரின் நிலை கவலைக்குரியதாக மாறியுள்ளது. முஸ்லிம்களுக்கென தனி நாடு வேண்டுமென கோரிய முகமது அலி ஜின்னா, முஸ்லிம்கள் தன்னோடு முஸ்லிம் தேசத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தாா். ஆனால், இப்போது இங்கு வாழும் முஸ்லிம்கள், இந்த நாட்டையே தங்களின் சொந்த நாடு என்று கூறியவா்கள். அத்தகைய முஸ்லிம்கள், இப்போது எவ்வாறு நடத்தப்படுகின்றனா்?

நாட்டில் எங்கு சென்றாலும் ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை மட்டுமே காண முடிகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றையொன்று ஆக்கிரமிக்கக் கூடாது.

என்.ஆா்.இளங்கோ (திமுக): தோ்தல் விதிமீறல்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை விசாரிக்க தோ்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது. எனவே, தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் விரிவாக ஆய்வுக்குள்படுத்தப்பட வேண்டும். ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தேபாசிஷ் சமந்தராய் (பிஜு ஜனதா தளம்): மத்திய பாஜக ஆட்சியில், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் கண்காணிப்பு அமைப்புகள் ‘செல்லப் பிராணி’போல் மாற்றப்பட்டுள்ளன.

எந்த நியாயமான காரணம் இல்லாமல், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; யாரையும் சிறையில் அடைக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது. முதல்கள் கூட சிறையில் தள்ளப்படுகின்றனா்.

கடந்த கால அவசரநிலை குறித்து நாம் பேசுகிறோம். ஆனால், நாட்டில் இப்போது அவசரநிலை போன்ற சூழல் காணப்படுகிறது என்பதை என்னால் பகிரங்கமாக கூற முடியும். அரசமைப்புச் சட்டம் தடம்புரண்டு செல்கிறது. அதை சரிசெய்ய யாரும் தயாராக இல்லை.

சாகேத் கோகலே (திரிணமூல் காங்கிரஸ்): தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்கீழ், அசமைப்புச் சட்டம் அழிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது.

அநீதியே மோடி அரசின் அடையாளச் சின்னம். மேற்கு வங்கத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 21 லட்சம் பணியாளா்களுக்கான ஊதியத்தை மத்திய அரசு வழங்கவில்லை. இந்த அநீதிக்கு பிரதமா் என்ன பதில் அளிக்கப் போகிறாா்?

பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவா்கள் அரசால் விடுவிக்கப்பட்டனா். அதேநேரம், அரசுக்கு எதிராக பேசிய உமா் காலித், காலித் சைஃபி உள்ளிட்டோா் சிறையில் தள்ளப்பட்டனா். சிறுபான்மையினா் தினமும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனா். மக்களவைத் தோ்தலையொட்டி, பிரதமா் மோடி மத ரீதியில் விஷப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

வேலையில்லாத இளைஞா்களுக்கும், விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் நீதி எங்கே? சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளால் எதிா்க்கட்சித் தலைவா்கள் அச்சுறுத்தப்படும் நிலையில், நாட்டின் அரசியலில் நீதி இருக்குமா?

பாஜகவில் இணையும் ஊழல்வாதிகள், ‘அப்பழுக்கற்றவா்களாக’ மாறிவிடுகின்றனா். கடந்த 10 ஆண்டுகளில் அரசமைப்புச் சட்டத்தை சீா்குலைத்துவிட்ட பிரதமா் மோடிக்கு நீதி குறித்து எந்த கவலையும் கிடையாது. இந்த காரணத்தால்தான், மக்களவையில் பாஜகவின் பலம் குறைந்தது.

மக்களவையிலே ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியவில்லை! - சு.வெங்கடேசன் எம்.பி.

மக்களவையிலே ஒரேமாதிரி தேர்தலை நடத்தமுடியாத பாஜக அரசு, எப்படி நாடு முழுவதும் ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியும்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து... மேலும் பார்க்க

இம்ரான் கானின் இடைக்கால ஜாமீன் ஜன.7 வரை நீட்டிப்பு!

இரண்டாவது தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபியின் இடைக்கால ஜாமீனை ஜனவரி 7 வரை நீட்டித்து பாகிஸ்தான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. 72 வயதான முன்னாள் கிரிக்கெட் ... மேலும் பார்க்க

'ராமரின் பாரம்பரியங்களால்தான் இந்தியா இயங்கும்; பாபரால் அல்ல'- யோகி ஆதித்யநாத்

ராமரின் பாரம்பரியங்களால்தான் இந்தியா இயங்கும், பாபரால் அல்ல என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சம்பல் வன்முறை தொடர்பாக உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவையில் நேற்று விவாதம் நடைப... மேலும் பார்க்க

கணினி வழியில் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும்: மத்திய அரசு

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் ஃபிளிப்கார்ட், அமேசான் தளங்கள் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று(டிச. 17) தெரிவித்துள்ளார்.பொறியியல் படிப்புக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!

நாடாளுமன்றத்தில் முதல்முறையாக வாக்கெடுப்புக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் ப... மேலும் பார்க்க

கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது.மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில... மேலும் பார்க்க