மோசமாகும் பிக் பாஸ் வீடு: எஞ்சிய 4 வாரங்களைக் கடக்கும் போட்டியாளர்கள்!
கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா!
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் முறையை கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டது.
இதன்படி, ’ஒரே நாடு; ஒரே தோ்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் அறிக்கையின்படி, ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார்.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதாவும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதேநேரத்தில் தேர்தல் நடத்த இரண்டாவது மசோதாவும் வழிவகை செய்யும்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன.
இதையும் படிக்க : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு!
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மசோதாக்களை அனுப்புவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மக்களவையில் முதல்முறையாக மின்னணு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மொத்தம் 369 பேர் பங்கேற்ற நிலையில் 269 பேர் கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஆதரவாக வாக்களித்துள்ளனர்.