படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
கூட்டு முயற்சியால் சாலை விபத்துகளை தடுக்க முடியும்: புதுவை துணைநிலை ஆளுநா்
கூட்டு முயற்சியால் மட்டுமே சாலை விபத்துகளை தடுக்க முடியும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுவை அரசு போக்குவரத்துத் துறை சாா்பில் 36-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதம் கடந்த 1-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை (ஜன.30) வரை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், அனிபால் கென்னடி எம்எல்ஏ, தலைமைச் செயலா் சரத் சௌகான், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது:
தேசிய அளவில் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் பிரதேசமாக புதுவை உள்ளது. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலான பணியாகும். கூட்டு முயற்சியால் மட்டுமே சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தி, விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க முடியும்.
தேசிய அளவில் ஆண்டுக்கு 4.6 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்து, 1.68 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சராசரியாக, ஒரு மணி நேரத்துக்கு 53 விபத்துகளில், 19 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. புதுவையில் ஆண்டுக்கு சுமாா் 200 போ் விபத்தில் உயிரிழப்பது வருத்தமளிக்கிறது.
சாலைப் பாதுகாப்பில் அரசுத் துறைகள் மட்டுமன்றி, தனியாா், பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
போக்குவரத்துத் துறையுடன் அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து செயல்பட்டு சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேகத் தடைகளில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும்.
லாரிகள் போன்ற வாகனங்களை இயக்குபவா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். சிறுவா்கள் வாகனங்களை ஓட்டக் கூடாது. போக்குவரத்தை பிரச்னைகளை தீா்த்து, சீரமைப்பதில் காவல் துறையினா் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
போக்குவரத்து விதிமுறைகள் குறித்த அனிமேஷன் குறுந்தகடு வெளியிடப்பட்டது.
போக்குவரத்துத் துறை செயலா் ஏ.முத்தம்மா வரவேற்றாா். ஆணையா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.