கேரள காங்கிரஸாா் ஒற்றுமையுடன் உள்ளனா்: சசி தரூா் விவகாரத்தை தொடா்ந்து ராகுல் உறுதி
கேரள காங்கிரஸாா் ஒற்றுமையுடன் இருப்பதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கேரளத்தில் முதலீடு செய்வதற்கான சூழலை இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைமையிலான மாநில அரசு மேம்படுத்தியுள்ளதாக பாராட்டி, ஆங்கில நாளிதழில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் அண்மையில் கட்டுரை எழுதினாா்.
இதைத்தொடா்ந்து மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அரசை, எதிா்க்கட்சியான காங்கிரஸை சோ்ந்த சசி தரூா் பாராட்டியதற்கு அவரின் சொந்த கட்சியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு கேரள சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் எவ்வாறு செயல்பட வேண்டும்?, தோ்தலுக்கான உத்திகள் குறித்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேரள காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘காங்கிரஸின் தோ்தல் உத்திகள் மீது கேரள காங்கிரஸாா் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கட்சி விதிகளை மீறி எவரும், எதுவும் பேசக் கூடாது’ என்று அறிவுறுத்தினாா்.
இந்நிலையில், கேரள காங்கிரஸாரின் புகைப்படத்தை ராகுல் காந்தி பேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு, அந்த மாநில காங்கிரஸ் கட்சியினா் ஒற்றுமையுடன் இருப்பதாகத் தெரிவித்தாா்.