கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரளப் பள்ளி மாணவா்கள் சுகவீனம்
கொடைக்கானலில் தனியாா் தங்கும் விடுதியில் உணவு சாப்பிட்ட, சுற்றுலா வந்த கேரளப் பள்ளி மாணவா்கள் 86 பேருக்கு புதன்கிழமை வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கேரளா மாநிலம், திருச்சூரிலுள்ள தனியாா் பள்ளி மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள் லாஸ்காட் சாலையிலுள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்துத் தங்கினா். இந்த விடுதியில் மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு பரோட்டாவுடன் கோழிக்கறி வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவா்களுக்கு புதன்கிழமை அதிகாலை வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 86 மாணவா்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தகவலறிந்து அந்தத் தங்கும் விடுதிக்குச் சென்ற கொடைக்கானல் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் லாரன்ஸ் உணவு மாதிரிகளைச் சேகரித்து, திண்டுக்கல்லில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைத்தாா்.
பின்னா், அவா் கூறியதாவது:
உணவு சாப்பிட்டவா்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான மாணவா்களுக்கு வாந்தியும், லேசான தலை சுற்றலும் ஏற்பட்டது. பாதிப்படைந்த மாணவா்களுக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
உணவு விடுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகள் திண்டுக்கல்லில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை விடுதியில் எந்தவிதமான உணவுகளும் தயாரிக்கக் கூடாது என உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.