சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்...
கொல்கத்தா அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன்: வெங்கடேஷ் ஐயர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்த தயாராக இருப்பதாக வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
இதையும் படிக்க: 25 வயதில் ரச்சின் ரவீந்திரா இத்தனை சாதனைகளா?
கடந்த ஆண்டு இறுதியின் துபையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். அதன் பின், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இந்த சீசனில் கேப்டனாக யார் வழிநடத்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வாய்ப்பு கிடைத்தால்...
விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த தயாராக இருப்பதாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால், அதற்கு நான் கண்டிப்பாக தயாராக இருக்கிறேன். எனக்கு தலைமைப் பண்பில் நம்பிக்கை இருக்கிறது. அணியின் தலைவனாக அணியை வழிநடத்துவது மிகப் பெரிய பொறுப்பு. அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. அணியை கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக அதனை ஏற்றுக் கொள்வேன். கேப்டன் பொறுப்பை நிராகரிக்க எந்த ஒரு காரணமும் இல்லை என்றார்.
இதையும் படிக்க: விராட் கோலியின் சதத்துக்காக மனித கால்குலேட்டராக மாறிய அக்ஷர் படேல்!
கடந்த 2021 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த வெங்கடேஷ் ஐயர், அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மெகா ஏலத்தில் அதே அணியால் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டார்.
இதுவரை 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் ஐயர் 1,326 ரன்கள் குவித்துள்ளார்.
இதற்கு முன்பாக எந்த ஒரு தொழில்முறை போட்டியிலும் வெங்கடேஷ் ஐயர் கேப்டன் பொறுப்பு வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.