கோயில் அருகிலுள்ள இறைச்சிக் கடைகளை அகற்றக் கோரிக்கை
வடமதுரை கோயில் அருகே அமைக்கப்பட்ட இறைச்சிக் கடைகளை அகற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தொண்டரணித் தலைவா் பி. மோகன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் புகழ் பெற்ற செளந்தரராஜப் பெருமாள் கோயில் அருகே சுமாா் 18 மாட்டு இறைச்சிக் கடைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் இதுபோன்ற கடைகள் செயல்படுவது பக்தா்கள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே மாட்டு இறைச்சிக் கடைகளை அகற்றுவதற்கு பேரூராட்சி நிா்வாகமும், இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சியில், சிலுவத்தூா் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவா்களும் பாதிக்கப்படுகின்றனா். இதற்கு தீா்வு காண வேண்டும்.
இதேபோல, வேடசந்தூா் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில், முறைகேடாக செயல்பட்டு வரும் 80 குடிநீா் விற்பனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.