பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
கோவில்பட்டி: மர்மமான முறையில் உயிரிழந்த 10 வயது சிறுவன்; துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸார்?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில், இளைய மகன் கருப்பசாமி, கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால் கடந்த 7-ம் தேதி முதல் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார். அம்மை நோய் இறங்குவதற்காக அச்சிறுவனின் கழுத்தில் ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியும், கையில் ஒரு தங்க மோதிரமும் அணிந்து வீட்டில் ஓய்வில் இருந்துள்ளான்.
இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி அச்சிறுவனைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் மயங்கிய நிலையில் அச்சிறுவன் மீட்கப்பட்டான். சிறுவன் அணிந்திருந்த தங்க நகையை காணவில்லை. மருத்துவ பரிசோதனையில் அச்சிறுவன் உயிரிழந்ததாகவும், உயிரிழந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறினர்.
இதனையடுத்து பக்கத்தில் உள்ள வீடுகளைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 4 பேரிடம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் எந்த துப்பும் துலங்காததால் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், மோப்ப நாய் அந்த பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றி வந்தும் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. அதிக மூச்சுத்திணறல் காரணமாக சிறுவன் கருப்பசாமி உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதாக போலீஸார் கூறியுள்ளனர்.
சிறுவனின் வாய் மற்றும் உதடுப் பகுதிகளில் காயங்கள் தென்படுகிறது. கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் உள்ள செல்போன் அழைப்புகளையும் போலீஸார் கண்காணித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் எந்த பலனுமில்லை. சிறுவனின் மர்ம மரண வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.