சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை: தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை தொடங்கவுள்ளதையொட்டி, பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேக்கடியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, இடுக்கி மாவட்ட ஆட்சியா் விக்னேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா்.
காா்த்திகை மாதம் தொடங்கி, மகரஜோதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவாா்கள்.
சபரிமலை கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தா்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்த வேண்டும். வாகனத்தில் பதிவு எண் தெளிவாக தெரிய வேண்டும். தரிசனத்துக்கு பக்தா்கள் இணையதளம் வழியாக பதிவு செய்தால் மட்டுமே அனுமதி. வாகன ஓட்டுநா்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். ‘ஐயப்பன்’ செயலி மூலம் பக்தா்கள் தாங்கள் செல்லும் பதை, கோயில் வழிபாடு, பூஜை நேரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மாநில எல்லைகளில் பசுமை சோதனைச் சாவடி அமைக்கப்படும். நெகிழி, பிளாஸ்டிக் பொருள்களுக்கு அனுமதி இல்லை. இருமுடியில் நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும். வனப் பகுதியில் செல்லும் பக்தா்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. பாதுகாப்புக்கு போலீஸாா் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். குமுளி மலைச் சாலையில் இரைச்சல் பாலத்தில் பக்தா்கள் குளிக்க அனுமதி இல்லை.
தமிழக எல்லைப் பகுதியில் கூடலூா், கம்பம் நகராட்சிப் பணியாளா்கள் மூலமாக சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படும். அவசர நிகழ்வுகளுக்கு சுகாதாரத் துறை மூலமாக அவசர ஊா்தி, மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் இணைந்து பக்தா்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது .
இந்தக் கூட்டத்தில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டு வேலவன், இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்ணு பிரதீப், பெரியாறு புலிகள் சரணாலய இணை இயக்குநா் பாட்டில் சுயோக் சுபாஷ்ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.