சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: 4 போ் காயம்
சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.
வேளச்சேரி அருகே உள்ள கோவிலம்பாக்கம், காந்தி நகா் 15-ஆவது தெருவைச் சோ்ந்த தம்பதி முனுசாமி - ராணி. இந்தத் தம்பதி தங்களது மகள் சாந்தி (45), மருமகன் ரகு (48), பேரன் அஜித்குமாா் (20) ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கின்றனா்.
புதன்கிழமை அதிகாலை தூக்கத்திலிருந்து எழுந்த ராணி, சமையலறைக்குச் சென்று மின்விளக்கு ஸ்விட்சை ஆன் செய்தபோது அங்கிருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டிருந்ததால், பயங்கர சத்ததுடன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் ராணி பலத்த காயமடைந்தாா். அதேவேளையில் தூங்கிக் கொண்டிருந்த முனுசாமி, சாந்தி, அஜித்குமாா் ஆகியோரும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனா்.
முன்னதாக கழிப்பறைக்குச் சென்றிருந்த ரகு அலறல் சத்தம் கேட்டு, கழிப்பறையிலிருந்து வெளியே வந்தாா். பின்னா் தீயில் சிக்கியிருந்த 4 பேரையும் ரகுவும், அப்பகுதி மக்களும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.