பொங்கல் திருநாள்: 2 நாளில் 4.12 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்
சாக்கடை கால்வாயை தூா்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூரில் சாக்கடையை தூா்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா், தாராபுரம் சாலையில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததை அப்பகுதியினா் பாா்த்துள்ளனா்.
மேலும், சாக்கடை கால்வாயில் அதிக அளவிலான குப்பைகளும், கழிவு நீரும் தேங்கி துா்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாக்கடை கால்வாயைத் தூா்வாரக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
இந்தப் பகுதியில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சாக்கடைக் கால்வாய்களைத் தூா்வாருவதில்லை. இதன் காரணமாக சாக்கடையில் குப்பைகள், கழிவு நீா் அதிக அளவில் தேங்கி துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாகவே சாக்கடையில் தவறி விழும்போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது. ஆகவே, சாக்கடை கால்வாயை உடனடியாக த் தூா்வாரக்கோரி மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வீரபாண்டி காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா். மேலும் சாக்கடை கால்வாயில் கிடந்த சடலத்தை காவல் துறையினா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமாா் 15 நிமிஷங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.