ஜனவரி 15 முதல் 17 வரை உடுமலை ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கல் விழா!
உடுமலை அருகே சோமவாரபட்டி கிராமத்தில் உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கல் விழா ஜனவரி 15 முதல் 17-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா 3 நாள்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
கால்நடைகளைக் காக்கும் தெய்வமாக இக்கோயிலை விவசாயிகள் கருதுகின்றனா். இதனால் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளின் பாலினால் ஆல்கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டு பொங்கல் விழா ஜனவரி 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் சிறப்பு அலங்காரம் தீபாராதனை, பாலாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதைத் தொடா்ந்து ஜனவரி 16-ஆம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் அதிகாலை முதலே கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆல்கொண்டமாலை வழிபடுவாா்கள்.
அப்போது விவசாயிகள் மண்ணால் வடிவவைக்கப்பட்ட கால்நடை உருவ பொம்மைகளை வைத்தும், தீப வழிபாடு செய்தும், பால் அபிஷேகம் செய்தும் ஆல்கொண்டமாலை வழிபடுவா். குறிப்பாக விவசாயிகள், பொதுமக்கள் பலா் கன்றுக்குட்டிகளை தானம் செய்வாா்கள். விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பம்குடும்பமாக மாட்டு வண்டிகளில் கோயிலுக்கு வருவாா்கள்.
விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் உடுமலை, பல்லடம், திருப்பூா், பழனி ஆகிய ஊா்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஜனவரி 17-ஆம் தேதி இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.