நண்பர் வீட்டு விருந்துக்கு சென்றவர் பலி!
உத்தரப் பிரதேசத்தில் நண்பர் வீட்டுக்கு சென்றவர் ஏழாவது தளத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவில் சட்டம் பயின்று வந்த காசியாபாத்தைச் சேர்ந்த தபஸ் என்ற மாணவர், நண்பரின் வீட்டுக்கு விருந்துக்காக சனிக்கிழமை (ஜன. 11) இரவு சென்றிருந்தார்.
நொய்டாவின் செக்டர் 99 இல் உள்ள சுப்ரீம் டவர்ஸில் ஒரு குடியிருப்பின் ஏழாவது தளத்தில் இருந்த நண்பரின் வீட்டு விருந்துக்கு சென்ற தபஸ், சிறிது நேரத்தில் ஏழாவது தளத்திலிருந்து கீழே விழுந்து, உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தபஸின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தபஸின் உயிரிழப்பு விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
தபஸின் நண்பர்களிடமும் விசாரணை நடப்பதாக காவல்துறையினர் கூறினர். தபஸின் பெற்றோர் புகார் அளித்தவுடன், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.