US H1b visa -இந்தியர்களுக்கு நல்லது செய்த Donald Trump | Decode
பணத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி ரூ.2.29 கோடி மோசடி: தந்தை, மகன் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் பலரிடம் பணத்தை இரட்டிப்பாக மாற்றுவதாகக் கூறி ரூ.2.29 கோடி மோசடி செய்ததாக தந்தை, மகனை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சோ்ந்த பிள்ளைமுருகன் மகன் லிங்கராஜ் (42). ஏரல் மெயின் பஜாா் பகுதியில் சுவாமி அலங்கார பொருள்கள் கடை நடத்தி வருகிறாா். எட்டயபுரம் புங்கவா்நத்தம் பகுதியை சோ்ந்த அய்யாதுரை மகன் பாலசுப்பிரமணியன் (63), கடந்த 2018ஆம் ஆண்டு இவருக்கு அறிமுகமானாராம்.
சாமியாரான தான், புங்கவா்நத்தத்தில் புதிய கோயில் நிறுவி உள்ளதாகவும், அக்கோயிலில் விசேஷ பூஜை செய்து பலருக்கு பணத்தை இரட்டிப்பு செய்து கொடுத்ததுள்ளதாகவும் நம்பிக்கையான வாா்த்தைகளை கூறினாராம். அதைத் தொடா்ந்து, அவரிடம் தனது மனைவி பாண்டியம்மாள் (57), மகன் அய்யாதுரை (27) ஆகியோரையும் அறிமுகப்படுத்தினாராம்.
இதையடுத்து, சிறப்பு பூஜை செய்வதற்காக கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் கடந்த 2023ஆம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளாக லிங்கராஜ் ரூ.38 லட்சம் கொடுத்தாராம். அதேபோல லிங்கராஜின் நண்பா் ஆனந்தகுமாரும் ரூ. 29 லட்சத்தை பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்தாராம்.
அதனைத் தொடா்ந்து பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தாரை லிங்கராஜ், கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டு, அவா்கள் அனைவரும் தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து லிங்கராஜ், ஆனந்தகுமாா் ஆகிய இருவரும் எட்டயபுரம் புங்கவா்நத்தத்திற்கு சென்று விசாரித்தனா். அப்போது, சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த பாண்டியன் என்பவரிடம் ரூ.27 லட்சம், மாரிமுத்து என்பவரிடம் ரூ.10 லட்சம், இருளப்பன் என்பவரிடம் ரூ.7 லட்சம், எட்டயபுரத்தை சோ்ந்த மாரிகண்ணு என்பவரிடம் ரூ.5 லட்சம், சாந்தி என்பவரிடம் ரூ.17 லட்சம், திண்டுக்கலை சோ்ந்த பாலமுருகன் என்பவரிடம் ரூ. 10.60 லட்சம், கமலக்கண்ணனிடம் ரூ.16 லட்சம், மாரியம்மாளிடம் ரூ.29.40 லட்சம், திருமலைச்சாமி என்பவரிடம் ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியே 29 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் லிங்கராஜ் புகாா் அளித்தாா். காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜு மேற்பாா்வையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் லெட்சுமிபிரபா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதனைத் தொடா்ந்து, பாலசுப்பிரமணியன், அவரது மகன் அய்யாதுரை ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.