Thai Amavasai | தை அமாவாசை தர்ப்பணம் செய்ய முடியாத சூழலில் மாட்டிக்கொண்டால் என்ன...
Doctor Vikatan: முடி உதிர்வுக்கும் சிகரெட் பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?
Doctor Vikatan: என் வயது 32. எனக்கு 15 வருடங்களாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. எத்தனையோ முறை முயன்றும் அதை நிறுத்த முடியவில்லை. 25 வயதிலேயே எனக்கு அதிக அளவில் முடி உதிர ஆரம்பித்தது. அதற்கும் என்னென்னவோ சிகிச்சைகள் செய்துபார்த்துவிட்டேன். ஆனால், சிகரெட் பழக்கம்தான் காரணம் என்றும் அதை நிறுத்தும்படியும் சொல்கிறார் ஒரு மருத்துவர். சிகரெட் பிடிக்கிற எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்னை வருவதில்லையே.... உண்மையிலேயே இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டா.... என்னுடைய முடி உதிர்வு பிரச்னையை சரிசெய்ய என்னதான் வழி?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்.
புகைப் பழக்கத்துக்கும் முடி உதிர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று உங்கள் மருத்துவர் சொன்னது உண்மைதான். அதன் பின்னணி தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள். முதலில் புகைப்பழக்கம், முடிக் கற்றைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கும். ரத்த நாளங்களைச் சுருக்கும். அதன் விளைவாக ரத்த ஓட்டம் குறைந்து கூந்தலின் வேர்களுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையும். கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டங்கள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமல் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.
சிகரெட் புகையில் உள்ள நச்சுகள் மற்றும் எதிர்வினை தன்மை கொண்ட மூலக்கூறுகளான ஃப்ரீ ரேடிகல்ஸ் இரண்டும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும். ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது உடலில் ஃப்ரீ ரேடிகல்ஸ் அதிகமாக உற்பத்தியாகி, உடலின் செல்கள், புரதங்கள் மற்றும் டிஎன்ஏவை சேதப்படுத்தும் ஒரு நிலை. இது உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை பாதித்து, பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. அதில் ஒரு பகுதியாக கூந்தலின் வேர்கள் பாதிக்கப்பட்டு, அவை பலவீனமாகி, மெலியும்.
புகைப்பழக்கம் என்பது ஹார்மோன் அளவுகளை மாற்றக்கூடியது. குறிப்பாக, டிஹெச்டி எனப்படும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (dihydrotestosterone) என்ற ஹார்மோன் அளவை அதிகரிக்கக்கூடியது. இந்த ஹார்மோன், ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா (androgenetic alopecia) எனப்படும் முடி உதிர்வு பிரச்னையை ஏற்படுத்துவதில் முக்கியமானது. தவிர, புகைப்பழக்கம் மண்டைப்பகுதியில் இன்ஃப்ளேமேஷன் எனப்படும் அழற்சியை ஏற்படுத்தி, மறைமுக விளைவாக முடி உதிர்வுக்கும் காரணமாகும்.
முடி உதிர்வைத் தடுக்க மட்டுமன்றி, இளமையான தோற்றம் வேண்டும் என்போரும் புகைப்பழக்கத்தை நிறுத்தியே ஆக வேண்டும். புகைப்பழக்கத்தைத் தொடரும் நபர்களுக்கு சீக்கிரமே முதுமைத் தோற்றம் ஏற்படும். இளநரையும் கூந்தல் மெலிவும் ஏற்படும். புகைப்பழக்கத்தால் மண்டைப்பகுதியும் கூந்தலும் வறண்டுபோகும். அதன் தொடர்ச்சியாக பொடுகு பிரச்னை வரும். பொடுகு வந்தால் அது முடி உதிர்வு, அரிப்பு, முகப்பரு உள்ளிட்ட பல பிரச்னைகள் வரிசையாக வர ஆரம்பிக்கும்.
புகைப்பழக்கத்தை நிறுத்திய சில மாதங்களிலேயே ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்பட ஆரம்பிப்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் உணர்வார்கள். அந்த வகையில் அவர்களுக்கு முடி உதிர்வு கட்டுப்படுவதையும் முடி வளர்ச்சி அதிகரிப்பதையும் கண்கூடாகப் பார்ப்பார்கள். எனவே, முதல் வேலையாக சிகரெட் பழக்கத்தை நிறுத்துங்கள். உங்களால் முடியாத நிலையில், நிபுணர்களின் உதவியை நாடுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.